2014-01-17 15:43:42

யூத-கத்தோலிக்க உறவுகள் விழா சனவரி 17


சன.17,2014. பல ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் சனவரி 17ம் தேதியன்று யூத-கத்தோலிக்க மதத்தவரின் உறவுகள் சிறப்பிக்கப்படுவதையொட்டி அர்ஜென்டீனா நாட்டு யூதமதப் பிரதிநிதிகள் குழு ஒன்று வத்திக்கானுக்கு வந்துள்ளது.
கிறிஸ்தவ விசுவாசத்தின் யூதமத மூலங்களை நினைவுகூரவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின்னர் இவ்விரு மதங்களுக்கிடையே இடம்பெறும் உரையாடலைக் கொண்டாடவும், நடைமுறைச் செயல்கள் வழியாக இத்தகைய உரையாடலை ஊக்குவிக்கவுமென சனவரி 17ம் தேதியன்று இத்தகைய நிகழ்வு 1990ம் ஆண்டில் இத்தாலியில் முதன்முறையாக நடத்தப்பட்டது.
இலத்தீன் அமெரிக்க யூதமத குருத்துவக் கல்லூரி அதிபர் ராபி Abraham Skorka அவர்களின் தலைமையில் இந்த யூதமதக்குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே 24 முதல் 26 வரை புனிதபூமிக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தைத் தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ராபி Skorka, இத்திருப்பயணம், இஸ்ரேல் மற்றும் அப்பகுதியின் அனைத்து மக்களுக்கும் ஆழமான நட்பு மற்றும் அமைதியின் செய்தியைக் கொண்டுவரும் எனக் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ராபி Skorka அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.