2014-01-16 14:49:21

புனிதரும் மனிதரே:புனித வனத்து அந்தோணியார்(251–356)


எகிப்தில் செல்வச் செழிப்புமிக்க நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர் அந்தோணி. இவருக்கு 18 வயது நடந்தபோது திடீரென இவரது பெற்றோர் இறந்தனர். திருமணமாகாத சகோதரி இவரது பொறுப்பில் விடப்பட்டார். பெற்றோரது இழப்பின் துயரத்தில் இருந்தபோது, ஒருநாள், 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்' என்ற இயேசுவின் அருள்வாக்கை வாசிக்கக் கேட்டார். இந்த அருள்வாக்கை அப்படியே ஏற்ற அந்தோணி, தனது குடும்பச் சொத்தின் ஒரு பகுதியை அண்டை வீட்டாருக்குக் கொடுத்தார். எஞ்சியுள்ள சொத்தை விற்று அப்பணத்தை ஏழைகளுக்கான நிதி சேமிப்புக்குக் கொடுத்தார். தனது சகோதரியை ஒரு கிறிஸ்தவ கன்னியர் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, அலெக்சாந்திரியாவின் மேற்கிலுள்ள பாலைநிலத்துக்குச் சென்றார். அங்கு தனியாகச் செபத்திலும் தபத்திலும் செலவழித்தார். மனச்சோர்வு, சோம்பல், அழகான பெண்கள் போன்ற வடிவங்களில் சாத்தான் இவரைக் கடுமையாய்ச் சோதித்தது. இவர் நினைவிழக்கும் நிலைக்கு, சில நேரங்களில் சாத்தான் இவரைக் கொடூரமாய் அடித்துப்போட்டது. அவர் இப்படி படுத்துக் கிடந்ததை மக்கள் பார்த்துள்ளனர். ஒரு சமயம், ஓநாய்கள், குள்ளநரிகள், சிங்கங்கள், பாம்புகள், தேள்கள் போன்ற கொடிய காட்டு விலங்குகள் அவரைத் தாக்குவதற்குத் தயாராக அவர்முன் நின்றன. அப்போது அவர் சப்தமாகச் சிரித்துக்கொண்டே, என்னைத் தாக்குவதற்கு உங்களில் ஒருவரே போதும் என்று சொன்னவுடன், புகைபோன்று அவை மறைந்து போயின. ஒருமுறை இவர் நடந்துபோகும்போது வழியில் தட்டு நிறைய வெள்ளிக் காசுகள் கிடந்தன. பின்னர் ஒருநாள் தங்கக் காசுகளைக் கண்டார். பாலைநிலத்தில் சாத்தான் இப்படி அந்தோணியாரைப் பல வழிகளில் சோதித்தது. அனைத்துச் சோதனைகளையும் ஆழ்ந்த செபத்தால் வெற்றி கண்ட இவர், புனித வனத்து அந்தோணியார், புனித பெரிய அந்தோணியார் என அழைக்கப்படுகிறார். அனைத்துத் துறவிகளுக்கும் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவரின் விழா சனவரி 17.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.