2014-01-16 16:07:06

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு தொடர்பு இல்லாதபோது, திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் எழுகின்றன


சன.16,2014. தவறான வழியில் செல்லும் அருள் பணியாளர்கள், வாழ்வளிக்கும் வானக உணவை மக்களுக்குத் தருவதற்குப் பதிலாக, நஞ்சு கலந்த உணவைத் தருகின்றனர் என்ற கடினமானதொரு கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லத்தில் காலை திருப்பலியாற்றியத் திருத்தந்தை அவர்கள், இறைவாக்கினர் ஏலியின் இரு புதல்வர்கள் தவறான வழியில் சென்ற குருக்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டி, இக்கருத்தை தன் மறையுரையில் வெளியிட்டார்.
இறைவனோடும், அவர் வழங்கும் வார்த்தைகளோடும் நாம் கொள்ளவேண்டியத் தொடர்பைப்பற்றிச் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, இந்தத் தொடர்பு இல்லாதபோது, திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் எழுகின்றன என்று எடுத்துரைத்தார்.
அருள் பணியாளர்கள், ஆயர்கள், பொதுநிலையினர் என்ற பல நிலைகளில் திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பதைக் கூறியத் திருத்தந்தை, இத்தகையத் தவறுகளால் திருஅவை இறை மக்களை இழந்துள்ளது என்பதையும் கூறினார்.
இஸ்ரேல் மக்கள் மத்தியில் உடன்படிக்கைப் பேழை இருந்தபோதிலும், அவர்கள் போரில் தோல்வியடைந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையை அல்லது புனிதர்கள் உருவத்தை அணிந்திருப்பதால் மட்டும் நாம் தோல்விகளிலிருந்து தப்பிக்கமுடியாது என்று வலியுறுத்தினார்.
மேலும், "அமைதிக்காக செபிப்பதோடு, அந்த அமைதியை நமது குடும்பங்களில் உருவாக்குவதிலிருந்து ஆரம்பிப்போம்" என்ற வார்த்தைகளை தன் Twitter செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.