2014-01-16 16:13:08

அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்


சன.16,2014. மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய தனிப்பட்ட வகையான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கு 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் ஒரு புதிய ஆய்வு எச்சரித்திருக்கிறது.
பந்த்தேரா (Panthera) என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்கப் பகுதியில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது.
செனகலில் துவங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில், இந்தப் பகுதிக்கே உரிய தனிப்பட்ட வகையானதும், மரபணு முறையில் மற்ற ஆப்ரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள், வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு விழுக்காடு இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறக்கிறது.
சிங்கங்களின் வாழ்விடங்கள் பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், பருத்தி பயிர் செயவதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களில் ஒருவரான Philipp Henschel கூறினார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இந்த அரியவகை மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாக்கத் தேவைப்படும் நிதி வசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்பதுடன், அந்த அரசுகளுக்கு வேறுபல முன்னுரிமை விவகாரங்களும் இருக்கின்றன என்றும் Henschel தெரிவித்தார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.