2014-01-15 15:47:18

திருப்பீடச் செயலருக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் இடையே வத்திக்கானில் இடம்பெற்ற சந்திப்பு


சன.15,2014. திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்களுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
சனவரி 14, இச்செவ்வாயன்று பேராயர் Parolin அவர்களுக்கும், அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அவர்களுக்கும் இடையே திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஏறத்தாழ 100 நிமிடங்கள் நீடித்தது என்றும், சிரியாவில் அமைதி நிலவ, ஜெனீவாவில் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, இச்சந்திப்பிலும் சிரியாவின் அமைதி முன்னிலை வகித்தது என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், பன்னாட்டுத் தூதர்களுக்கு வழங்கிய உரையில், மனிதாபிமான எண்ணங்களுடன் மனிதர்களுக்கு உதவிகள் செய்வதே உலகில் அமைதியைக் கொணரும் என்று கூறியது, இந்தச் சந்திப்பிலும் பேசப்பட்டது என்று திருப்பீடப் பேச்சாளர் எடுத்துரைத்தார்.
மேலும், அமைதிக்காகப் போராடும் பல்வேறு ஆப்ரிக்க நாடுகள் குறித்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் வெளியான நலவாழ்வு குறித்த சட்டம், மத உரிமைகளுக்கும், ஒருவரின் மனசாட்சிக்கும் இடையூறாக இருக்கக்கூடாது என்ற கருத்தும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அருள் பணியாளர் Lombardi அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஜான் கெர்ரி அவர்கள், திருப்பீடச் செயலருடன் மேற்கொண்ட இச்சந்திப்பில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் அவையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.