2014-01-15 15:52:34

ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள சீரோ மலபார் மறைமாவட்டம் புலம்பெயர்ந்தோருக்கு முதன்மை இடம் - கர்தினால் Mar George Alencherry


சன.15,2014. ஆஸ்திரேலியாவில் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள சீரோ மலபார் வழிபாட்டு முறை கத்தோலிக்க மறைமாவட்டம் பல நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்வதில் முதன்மை கவனம் செலுத்தவேண்டும் என்று சீரோ மலபார் வழிபாட்டு முறை தலைமை ஆயர் கர்தினால் Mar George Alencherry அவர்கள் கூறினார்.
சனவரி 11, கடந்த சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மெல்பர்ன் நகரில் உருவாக்கப்பட்ட சீரோ மலபார் வழிபாட்டு முறை மறைமாவட்டம், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள 35,000க்கும் அதிகமான சீரோ மலபார் கத்தோலிக்கர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மறைமாவட்டம் என்று கர்தினால் Alencherry அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு பணிகள் புரிவது, கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றில் முக்கியப் பணியாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Alencherry அவர்கள், இன்றையச் சூழலில், புலம்பெயர்ந்தோருக்கு அதிக கவனம் செலுத்துவது திருஅவையின் முக்கியப் பணி என்பதையும் வலியுறுத்தினார்.
உலகெங்கும் 36 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட சீரோ மலபார் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் மறைமாவட்டங்களில் ஒன்று, 2001ம் ஆண்டு, முதன் முறையாக இந்தியாவுக்கு வெளியே, சிகாகோ நகரில் அமைக்கப்பட்டது. அதற்குப் பின், இரண்டாவது முறையாக, மெல்பர்ன் நகரில் இப்புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக போஸ்கோ புதூர் அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார். இம்மறைமாவட்டத்தின் பேராலயம், இறைவனின் தாயான மரியாவுக்கு அர்ப்பணம் செய்யப்படவுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.