2014-01-15 15:11:02

அமைதி ஆர்வலர்கள் – முதல் நொபெல் அமைதி விருது


சன.15,2014. நொபெல் அமைதி விருது வரலாற்றில் Jean Henry Dunant, Frederic Passy ஆகிய இருவருமே அதனை முதன் முதலில் பெற்றவர்கள். இவ்விருது 1901ம் ஆண்டில் முதன் முதலில் வழங்கப்பட்டது. Frederic Passy, பிரான்ஸ் நாட்டுப் பொருளாதார நிபுணர். லக்சம்பர்கை கைப்பற்றுவது குறித்து பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடையே நடந்த போரைத் தடுப்பதற்குத் தலையிட்டவர். பிற்காலத்தில் போர்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அனைத்துலக மற்றும் நிரந்தர அமைதி அமைப்பை உருவாக்கியவர். மேலும், ஹென்றி டுனான்ட் என்பவர் அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களைத் தோற்றுவித்தவர். போர்க் கைதிகள் விடுதலை பெறவும், போர்க்களத்தில் காயமடைந்தவர்க்கும் இச்சங்கங்கள் ஆற்றிவரும் பணிகள் அனைவருக்கும் தெரிந்ததே. முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் இவற்றின் நடவடிக்கைகளைப் பாராட்டி 1917 மற்றும் 1944ம் ஆண்டுகளிலும், இதன் நூற்றாண்டையொட்டி 1963ம் ஆண்டிலும் என மூன்று தடவைகள் இந்த அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் நொபெல் அமைதி விருதை வென்றுள்ளது. இச்சங்கம் உருவாகக் காரணமானதே ஒரு போர்தான்.
ஹென்றி டுனான்ட் (Henry Dunant) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிறந்த தொழிலதிபர். சமூக ஆர்வலர். கால்வனிஸ்ட் கிறிஸ்தவ சபையைச் சார்ந்த இவரது பெற்றோர் சமூகச் சேவைகளில் சிறந்து விளங்கினர். இவரது தந்தை Jean-Jacques Dunant சிறையிலும் கருணை இல்லத்திலும் பணிபுரிந்தார். இவரது தாய் Antoinette Dunant-Colladon நோயாளிகள் மற்றும் ஏழைகள் மத்தியில் சேவையாற்றினார். பெற்றோர் வழியை இவரும் பின்பற்றி தனது 18வது வயதில் தர்மம் வழங்கும் ஜெனீவா கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது நண்பர்களுடன் சேர்ந்து வியாழன் கழகம் என்ற ஓர் அமைப்பையும் உருவாக்கினார். இவ்வமைப்பில் உள்ளவர்கள் விவிலியம் கற்று ஏழைகளுக்கு உதவ வேண்டும். 1852ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி YMCA என்ற இளம் மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தை ஜெனீவாவில் தொடங்கினார். பின்னர் மூன்றாண்டுகள் கழித்து பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அதன் பன்னாட்டு இயக்கம் உருவாகவும் இவர் காரணமானார். 21வது வயதில், 1849ம் ஆண்டில் கல்லூரி படிப்பைவிட்டுவிட்டு தொழிலில் கவனம் செலுத்தினார். வெளிநாட்டுக் காலனி நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார். பிரான்ஸ் நாட்டின் காலனியாக இருந்த அல்ஜீரியாவில், சோளம் உற்பத்திக்குக் குறைந்த விலையில் 1856ம் ஆண்டில் நிலம் கிடைத்தது. ஆயினும் நிலம் மற்றும் தண்ணீர் உரிமைகளுக்கான ஒப்பந்தம் தெளிவாகக் கையெழுத்திடப்படவில்லை. எனவே அப்போதைய ப்ரெஞ்ச் பேரரசர் 3ம் நெப்போலியனை நேரடியாகச் சந்திக்க விரும்பினார்.
அச்சமயத்தில் 3ம் நெப்போலியன் தனது படைகளுடன் இத்தாலியின் லொம்பார்தியாவில் தங்கியிருந்தார். அச்சமயம், இத்தாலியின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருந்த ஆஸ்ட்ரியாவுக்கு எதிராக, Piedmont-Sardiniaவுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டிருந்தது பிரான்ஸ் நாடு. நெப்போலியன், Solferino என்ற சிறிய நகரத்தில் தங்கியிருந்தார். 1859ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி மாலை Solferino வந்து சேர்ந்தார் ஹென்றி டுனான்ட். அன்று அந்நகருக்கு அருகில் கடுமையாகச் சண்டை நடந்துகொண்டிருந்தது. 23 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இறந்துகொண்டிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் போர்க்களத்திலே கிடந்தனர். இவர்களையெல்லாம் கவனிப்பதற்கு யாரும் அவ்வளவு அக்கறை எடுத்ததாக டுனான்டுக்குத் தெரியவில்லை. எனவே அங்கிருந்த பொதுமக்களை, குறிப்பாக பெண்களையும் சிறுமிகளையும் அழைத்துக்கொண்டு காயமடைந்த மற்றும் நோயாளிப் படைவீரர்களைக் காக்கும் பணியில் இறங்கினார். தேவையான பொருள்களை தனது செலவிலே வாங்கிக் கொடுத்தார். இவர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்று சொல்லி, பாகுபாடின்றி பராமரிக்குமாறு சொன்னார். ப்ரெஞ்ச் இராணுவம் கைதுசெய்திருந்த ஆஸ்ட்ரிய மருத்துவர்களை விடுதலை செய்யவைத்து, அம்மருத்துவர்களும் காயமடைந்த மற்றும் நோயாளிப் படைவீரர்களுக்கு உதவச் செய்தார்.
டுனான்ட் தான் வந்த காரியத்தையே மறந்து ஜெனீவா திரும்பினார். நாற்பதாயிரம் உயிர்களைக் காவுகொண்ட Solferino போர்க்கள அனுபவத்தை ஒரு புத்தமாக எழுதி தனது சொந்த செலவிலேயே 1862ம் ஆண்டில் வெளியிட்டார். Solferino நினைவு என்ற தலைப்பிலான அந்த நூலின் முதல் பதிப்பிலேயே 1600 பிரதிகள் விற்றன. காயமடைந்த படைவீரர்களைப் பராமரிப்பதற்கு நடுநிலையான ஓர் அமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டார். இதன் பயனாக உருவாகியதே செஞ்சிலுவை சங்கம். ஜெனீவா பொதுநல வாழ்வு கழகத் தலைவர் குஸ்தாவ் மாய்னர் என்பவர் இவரின் புத்தகத்திலுள்ள பரிந்துரைகளை அக்கழகக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். டுனான்ட் உட்பட 5 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு மேலும் பரிசீலிக்கப்பட்டது. 1863ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இந்த 5 பேரும் சேர்ந்து முதல் கூட்டம் நடத்தினர். இதுவே அனைத்து நாடுகளின் செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்ட நாளாகும். டுனான்ட் அதன் செயலராகவும் இருந்தார். அதற்குள் டுனான்ட் ஐரோப்பாவில் நாடுகளின் தலைவர்கள், அரசர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆயினும் மாய்னர், இவர்மீது எப்பொழுதும் பொறாமைக் கண் வைத்திருந்தார்.
டுனான்ட் மனிதாபிமானப் பணிகளுக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்திருந்ததால் அல்ஜீரியாவில் அவரது தொழில் சரிந்தது. எல்லாம் திவாலானது. இவரது குடும்பமும், இவரது வணிகத்தில் முதலீடு செய்தவர்களும் மிகவும் கஷ்டப்பட்டனர். முடிவில் செஞ்சிலுவை சங்கச் செயலர் பொறுப்பைவிட்டு விலக வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டார். 1868ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி செயலர் பதவியை விட்டு விலகினார். அதே ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி செஞ்சிலுவை சங்கத்திலிருந்தே முழுவதும் நீக்கப்பட்டார். அதன் தலைவராக இருந்த மாய்னரே, டுனான்ட்டை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் எனச் சொல்லப்படுகிறது. டுனான்டின் தாயும் இறக்கவே ஜெனீவாவை விட்டுச் சென்றார் அவர். அதன்பின்னர் அவர் அந்நகரத்துக்குத் திரும்பவே இல்லை. பிரான்சின் பாரிசில் குடியேறி தனது மனிதாபிமானக் கருத்துக்களையும் திட்டங்களையும் எடுத்துச் சொன்னார். பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடையே நடந்த சண்டையின்போது பொது நிவாரணக் கழகத்தைத் தொடங்கினார். ஆயுதக்களைவு பேச்சுவார்த்தையை ஊக்குவித்து, பன்னாட்டு அளவில் நடக்கும் சண்டைகளுக்கு இடைநிலை வகிக்க அனைத்துலக நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படுமாறு வலியுறுத்தினார். உலக நூலகம் தொடங்கப்பட உழைத்தார் இவர். இதுவே பின்னாளில் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உருவாகக் காரணமானது. இவ்வேளையில் செஞ்சிலுவை சங்கத்தின் கிளைகள் பல நாடுகளில் பரவின. இலண்டன் சென்றார் டுனான்ட். அவரின் முயற்சியினால், 1875ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி இலண்டனில் அடிமை வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்கும் உலக மாநாடு நடத்தப்பட்டது.
டுனான்ட்டை வறுமையும் கடன்தொல்லையும் மேலும் மேலும் வாட்டின. திருமணமாகாத இவர் வறுமையில் வாடி கால்நடையாகவே பல ஊர்கள் சுற்றினார். இறுதியில் 1887ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஹெய்டன் என்ற சிறு கிராமத்தில் தெருவோரத்தில் நோயினால் உருக்குலைந்து மயங்கிக் கிடந்தார். அவரை யார் என அடையாளம் தெரியாமல் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கே 1895ம் ஆண்டு Georg Baumberger என்ற பத்திரிகையாளர் இவரை அடையாளம் கண்டு அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். இது வெளியான ஒரு சில நாள்களில் ஐரோப்பா முழுவதும் இவர் புகழ் பரவியது. டுனான்ட்டை மறந்திருந்த உலகம், மீண்டும் நினைவுகூர்ந்து விருதுகளைக் குவித்து கவரவித்தது. 1901ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதையும் அவருக்கு அளித்தது. 1828ம் ஆண்டு மே 8ம் தேதி பிறந்த ஹென்றி டுனான்ட், 1910ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி இறந்தார். டுனான்ட் பிறந்த நாள், அனைத்துலக செஞ்சிலுவை சங்க தினமாகும்.







All the contents on this site are copyrighted ©.