2014-01-14 15:18:42

வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுகாக்க இலங்கை-சவுதி உடன்பாடு


சன.14,2014. வீட்டுப் பணிப்பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, தொழில்சார்ந்த முக்கிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் சவுதி அரசும் இலங்கை அரசும் இத்திங்களன்று கையெழுத்திட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சர் Adel Mohammed Fakih, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் Dilan Perera ஆகிய இருவரும் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணியிடம், அதிக ஊதியம், உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு இந்த இருநாடுகளின் ஒப்பந்தம் அடிப்படையாக அமைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பெருமளவிலான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவுக்கேச் செல்கின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புள்ளிவிபரங்களின் படி, ஏறக்குறைய நாலரை இலட்சம் இலங்கைத் தொழிலாளர்கள் சவுதியில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்; இவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பணிப்பெண்கள்.
இதற்கிடையே, இலங்கை அரசு முதலில் உள்நாட்டுத் தொழில்சட்டங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Gulf Business








All the contents on this site are copyrighted ©.