2014-01-14 15:18:02

திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாசம் மனிதரின் தோள்மீதுள்ள சுமை அல்ல


சன.14,2014. இயேசுவைப்போல் வாழும் கிறிஸ்தவர்கள், மக்களைத் தேடிச் செல்வதிலும், மக்களைக் குணப்படுத்துவதிலும், அவர்களை அன்பு கூர்வதிலும் ஆர்வமாக இருப்பவர்கள், இவர்கள் பரிசேயர்கள், சட்டவல்லுனர்கள் அல்லது ஊழல்வாதிகள் போன்று இருப்பவர்கள் அல்ல எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், ‘எடுத்துக்காட்டான’ வாழ்வு வாழும் விசுவாசிகள் பற்றி விளக்கினார் திருத்தந்தை.
மறைநூல் அறிஞர்கள் போலன்றி, அதிகாரமுள்ளவராக இயேசு எவ்வாறு போதித்தார் என்று கூறிய திருத்தந்தை, மறைநூல் அறிஞர்கள் போதித்தார்கள், மக்கள்மீது பளுவான சுமையை சுமத்தினார்கள், ஏழை மக்கள் முன்னோக்கி நகர முடியாதபடி அது இருந்தது என்றும் கூறினார்.
குழந்தை வரத்துக்காக ஆண்டவரிடம் கண்ணீரோடு முணுமுணுத்து செபித்த அன்னா, குடித்துவிட்டு இவ்வாறு செபித்துக்கொண்டிருக்கிறார் என ஆலயக் குரு ஏலி தவறாகப் புரிந்துகொண்டதை விளக்கும் இந்நாளின் முதல் வாசகத்தையும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசத்தின் தலைவராக, விசுவாசத்தின் பிரதிநிதியாக இருக்கும் இவரின் இதயம் அந்தப் பெண்ணைப் புரிந்துகொள்ளவில்லை என்று கூறினார்.
கடவுளுக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்களால் அன்பு கூரப்படாததை இறைமக்கள் எத்தனை தடவைகள் உணர்ந்திருப்பார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், தங்கள் சூழ்நிலைகளால் ஆதாயம் தேடும் ஊழல்மிக்க கிறிஸ்தவர்கள், ஊழல்மிக்க குருக்கள், ஊழல்மிக்க ஆயர்கள் யார் யார் என்பதையும் விளக்கினார்.
குரு ஏலியின் மகன்கள் போன்று ஊழல்வாதிகளாக வாழாமல் இருக்கவும், இயேசுவைப் போன்று மக்களை அன்புசெய்து, மக்களைக் குணப்படுத்தி, மக்களைத் தேடிச் செல்பவர்களாக வாழவும் ஆண்டவரிடம் வரம் கேட்போம் என மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.