2014-01-13 15:41:43

வாரம் ஓர் அலசல் – உயரட்டும் உழவரின் வாழ்வு


சன.12,2014. RealAudioMP3 ஒருமுறை சேகர் என்பவர், சதாசிவன் என்ற அவரது அலுவலக நிர்வாகி வீட்டுக்கு ஒரு கோப்பில் கையெழுத்து வாங்கச் சென்றார். அப்போது சதாசிவன், சேகரைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி உட்காருமாறு சைகை செய்துவிட்டு, தொலைபேசியில் யாரிடமோ உத்தரவுகள் போட்டுக்கொண்டிருந்தார். ஆமாம், இன்னும் ஒருமணி நேரத்துலே தக்காளி, கேரட்டு மொத்தத்தையும் அறுவடை பண்ணிடணும், இல்லேன்னா காஞ்சு போயிடும், அதுக்கு அப்புறம், அந்த நெல்லு, அதையும் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள அறுவடை ஆரம்பிக்கணும், ராஜா கிட்டச் சொல்லி உடனே மொத்த வயலையும் உழுது இன்னிக்கு 4 மணிக்குள்ளே திருப்பியும் மொத்த வயல்லேயும் நெல் போடச்சொல்லு, கொஞ்சம் ரூபா சேக்கணும், ஆமாம், மல்டிபில் டூல் யூஸ் பண்ணச் சொல்லு, டீசல் தீந்து போச்சுன்னா ஆளைவிட்டாவது இன்னிக்கு அறுவடை பண்ணியே ஆகணும், அப்புறம் ப்ரியாகிட்ட சொல்லு. அவளோட வயல்லயும், இன்னிக்கு பதினோரு மணிக்கு மொத்த அறுவடை பண்ணனும், அப்போதான் சரியா 12 மணிக்கு உழுது திருப்பியும் கேரட்டு போட நேரம் சரியா இருக்கும். நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் சீக்கிறம் வந்துடுவேன், நானும் வந்தவுடனே என்னோட வயல்ல மொத்தத்தையும் அறுவடை பண்ணிட்டு சன் ப்ளவர் போட்ருவேன், என்று கூறிக்கொண்டே அந்த முக்கியமான கோப்பில் கையெழுத்திட்டார். சேகரும் அந்த கோப்பை வாங்கிக்கொண்டே சார் இந்த மாதிரி ஒரு இன்டெர் நேஷனல் லெவெல்ல இருக்கிற ஒரு அலுவலகத்துலே இவ்ளோ பெரிய நிர்வாகியா இருந்தாலும் உங்க குடும்பத்தோட விவசாயத்திலெ இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே உங்களை நெனைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு, இன்னிக்கும் நம்ப நாடு ஓரளவாவது விவசாயத் துறையிலே முன்னணிலே இருக்குன்னா, அதுக்கு உங்களை மாதிரி நல்லவங்கதான் காரணம் என்றார். நாங்ககூட விவசாயக் குடும்பம்தான் சார், நாட்டுலே தண்ணி இல்லே, உரமெல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது, மின்சாரம் கிடைக்கலே, இனிமே விவசாயிக்கெல்லாம் மதிப்பிலைடா, விவசாயம் செய்யறதே இனிமே கஷ்டம்தான், அதுனாலே நீயாவது ஒரு நல்ல வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்துன்னு சொல்லி, எங்க அப்பா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வெச்சாரு என்றார். சேகரை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு விலாப்புடைக்கச் சிரிக்க ஆரம்பித்தார் சதாசிவன். இவர் இவ்வளவு சிரிக்கும்படி என்ன சொல்லிட்டொம்னே புரியாம திருதிருன்னு முழிச்சிண்டு உக்காந்திருந்தார் சேகர். அவர் சிரித்து முடித்துவிட்டு, நாங்க இந்த கம்யூட்டர் இணையதளத்திலே பேஸ்புக்க்னு ஒரு விளையாட்டு இருக்கு, அதுலே இந்த விளையாட்டு விளையாடிண்டு இருக்கோம், அப்பிடியே வயல், அதுலே எல்லாக் காய்கறிகளும், நெல்லு எல்லாமே எப்பிடி விளையுதுன்னு அருமையாப் பண்ணி இருக்கான். ப்ளாஷ் ப்ளேயர்ன்னு ஒரு மென்பொருள் இருக்கு, அதுலே என்னமா டிசைன் பண்ணி இருக்கான் தெரியுமா என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார் சதாசிவன்.
அன்பு நேயர்களே, இந்தியாவின் விவசாயிகள் நிலைமையை விவரிக்கும் விதமாக தமிழ்த்தேனீ என்ற பெயரில் இணையத்தில் இது பிரசுரமாகியிருந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தமிழர், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது உண்மைதான். இவ்விழா, உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளின் பெருநாள். வானம் மும்மாறி பொழிந்து மூன்று போகம் விவசாயம் செய்தது அந்தக் காலம். அதனால் அப்போது நல்ல விளைச்சலைக் கொடுத்த இறைவனுக்கும், உழவுத்தொழிலுக்கு உதவிய மாடுகள், கதிர்அறுக்கும் அரிஅவாள் உள்ளிட்டவைகளை உழவர்கள் வழிபட்டனர். ஆனால் இன்றோ நாட்டின் பெரும் பகுதிகளில் ஒருபோகம் விளைவதே பெரும்பாடாக உள்ளது. இவ்வாண்டு சிவகங்கை மாவட்டத்தில் மழையே இல்லை என தொலைபேசியில் பலர் மனக்கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். நெல்பயிர்கள் கதிர்களுடன் முற்றிவரும் நேரத்தில் மழை பெய்யாததால் அத்தனை பயிர்களும் கருகிவிட்டன, வயல்களில் மாடுகளை மேயவிட்டுள்ளோம் என்று அப்பகுதி மக்கள் மனதுகனக்கச் சொல்கின்றனர். போதிய மழையின்மை, அணைக்கட்டு நீர் கிடைக்காமை போன்றவற்றால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவரும் சூழல் ஒருபுறமிருக்க, விவசாய நிலங்கள் இந்திய அரசால் அழிக்கப்படுகின்றன என மருத்துவர் கு.சிவராமன் என்ற சமூக ஆர்வலர் புதிய தலைமுறை என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்
RealAudioMP3 இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. பால், முந்திரிக்கொட்டை, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா. உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும்(281 மில்லியன்) அது கொண்டிருக்கிறது. கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, உள்நாட்டுமீன் ஆகியவற்றில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு இந்தியா. இந்நாடு புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் இந்தியா 10 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது, அதில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படி ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. ஆயினும் நாட்டில் விவசாயிகள் அதிகமாகக் கஷ்டப்படுகின்றனர். கடன்தொல்லையால் தற்கொலைகள் செய்து கொள்கின்றனர். திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் வறுமை காரணமாக, விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்கின்றனர் என்கிறார் சத்தியம் செய்திகளுக்காக, நிருபர் கோபு.
RealAudioMP3 இந்தியாவில், 1991 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இடைப்பட்ட 20 ஆண்டுக் காலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விவசாயிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களில் நாளொன்றுக்கு சராசரியாக 2000 விவசாயிகளை இந்தியா இழந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளைப் பார்த்தோமேயானால், நாளொன்றுக்கு 2035 விவசாயிகளை இழந்துள்ளோம். இந்தியத் திட்டக் குழுவின் புள்ளி விவரத்தின்படி 2005 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயத் துறையில் 140 இலட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம் நிறுவனங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், சாலைகள்-மேம்பாலங்களாகவும் மாற்றினால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை உயருவதோடு, தட்டுப்பாடும் உருவாகும். உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்களின் தரத்தை உயர்த்த முன்வராவிட்டால், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியா மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ளவேண்டிய நிலை வரும். ஒரு நாட்டில் விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு மேற்கொள்ளும் எந்தவித முன்னேற்றமும் எதிர்பார்க்கும் பலனைத்தராது. இலங்கையிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விவசாயத்தை நம்பியே உள்ளன. இந்திய விவசாயம் எப்படி அழிந்தது என, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லமுத்து அவர்கள் தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து விவாதத்தில் சொல்லியிருக்கிறார்...
RealAudioMP3 மனித வாழ்வுக்கு அச்சாணியாக இருப்பது விவசாயம். எனவே இக்காலத்தில் உலகினர் எதிர்கொள்ளும் கடும் உணவுத் தட்டுப்பாடுட்டை அகற்றி, உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்திலும் FAO என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், 2014ம் ஆண்டை வேளாண் குடும்பங்கள் ஆண்டு என அறிவித்து அதனை, பல செயல்திட்டங்கள்மூலம் சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டை ஆரம்பித்து வைத்துப் பேசிய FAO இயக்குனர் José Graziano da Silva அவர்கள்
RealAudioMP3 இன்று உலகில் குடும்பமாகச் செய்யப்படும் விவசாயங்கள் 50 கோடிக்கு அதிகமாக உள்ளன. இவ்வகை விவசாயங்கள் முற்றிலும் குடும்ப உறுப்பினர்களையே சார்ந்துள்ளன. இவை கோடிக்கணக்கான மக்களுக்கான உணவை உற்பத்தி செய்கின்றன. பல வளரும் நாடுகளில் குடும்பமாகச் செய்யப்படும் இந்தக் விவசாயங்கள், மற்ற வகையான விவசாயங்களிலும் 80 விழுக்காடாகும். இந்தக் குடும்ப விவசாயங்களை ஊக்குவிப்பதன்மூலம், 2015ம் ஆண்டுக்குள் உலகில் பசியை முற்றிலும் அகற்றுவதற்கான ஐ.நா.வின் திட்டத்தை நிறைவேற்ற முடியும். பாதுகாப்பற்ற உணவுச் சூழலில் வாழும் மக்களில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அண்மை கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர். இம்மக்கள் விவசாயிகளாக இருந்தாலும், இயற்கை வளங்கள், நாட்டின் கொள்கைகள், தொழில்நுட்பங்கள் போன்றவை இவர்களைச் சென்றடைவதில்லை என்று கூறியுள்ளார்..
நெற்றி வியர்வை நிலத்தில்பட பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டுமென தமிழர் விழாவாம் பொங்கல் நாளில் குரல் கொடுப்போம். சூரிய உதயத்திற்குமுன் வயலுக்குச் சென்று, சூரியன் மறைந்த பின்னரும் உழைத்து உழைத்து ஓடாகிப்போகும் விவசாயிகளுக்கு இந்தத் தை திருநாளில் நன்றி சொல்வோம். இயற்கை அன்னை இலவசமாக வழங்கும் மழைநீரைப் பங்கிட மறுக்கும் கல்மன அதிகாரிகளின் மனம் இளக வேண்டும், உழவர்களின் களனிகள் நீரால் நிரம்ப வேண்டும், அதனால் உழவர் மட்டுமல்ல, அவர்களின் உழைப்பால் கவலையின்றி உண்ணும் அனைவரும் மகிழ்வுடன் வாழ வேண்டுமென விழைவோம். நீரின்றி வறண்டுபோன நிலங்களால் வாழ்வும் வறண்டுபோய் துன்புறும் உழவர் பெருமக்களின் மனிதம் காத்து அவர்களின் துயர் துடைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம். வானம் மும்மாறி மழையைப் பொழிய வேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
வேளாண்மை சிறக்கட்டும்! கிராமங்கள் செழிக்கட்டும்! என, எமக்குப் பொங்கல் வாழ்த்து அனுப்பியுள்ள நம் நேயர் ஊத்துக்குளி இராகம் பழனியப்பன் அவர்களோடு சேர்ந்து உழவர் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் எல்லாருக்கும் தெரிவிக்கிறோம். உயரட்டும் உழவரின் வாழ்வு!







All the contents on this site are copyrighted ©.