2014-01-13 16:43:42

போலியோ அற்ற நாடு என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது


சன.13,2014. கடந்த மூன்றாண்டுகளில் போலியோ தாக்கிய ஒரு நிகழ்வுகூட வெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை இத்திங்களன்று எட்டியது.
இருப்பினும், உலக நலவாழ்வு நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி நிகழ்வு மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் இடம்பெற்றது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், ஏறத்தாழ 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் 20 கோடியே 90 இலட்சம் வீடுகளுக்கு சென்று, ஏறத்தாழ 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தந்தனர்.
தற்போது புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது.
1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.