2014-01-13 15:36:54

புனிதரும் மனிதரே : முத்திப்பேறுபெற்ற ஹெர்மான்,மாற்றுத்திறனாளி(Hermann Contractus)


உருவத்தைப் பார்ப்பதற்கே விகாரமாய், உடல் திருகலாய், கோணலாக, உறுப்புகள் ஒழுங்கில்லாமல் பிறந்தவர் ஹெர்மான். முன்பற்கள் மேலே தூக்கியபடி, கிழிந்த உதடுகளுடன், தண்டுவடம் திருகலாய்ப் பிறந்த ஹெர்மானால், பிறரது துணையின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல முடியாது. பேச்சும் அவ்வளவு எளிதாக வராது. ஆனால் இவர் அபார மூளையையும், இரும்பு போன்ற உறுதியான மனபலத்தையும் கொண்டிருந்தார். இவர் நொண்டி ஹெர்மான் என்றே அழைக்கப்பட்டார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஏழு வயது நடந்தபோதே இவரது பெற்றோர் இவரை ஆசீர்வாதப்பர் துறவு சபையினர் இல்லத்தில் விட்டுவிட்டனர். உடலளவில் பல குறைகள் இருந்தாலும், வானியல், இறையியல், கணிதயியல், வரலாற்றியல், கவிதையியல் ஆகியவற்றில் சிறந்திருந்ததோடு, அராபியம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலும் மிகத் திறமைவாய்ந்தவராக இருந்தார். அதோடு இசைக் கருவிகளையும், வானியல் ஆய்வுக் கருவிகளையும் வடிவமைத்திருக்கிறார். பல செபங்கள் எழுதியுள்ளார். பல சமயப் பாடல்களை இயற்றியுள்ளார். 11ம் நூற்றாண்டில் இவர் எழுதிய "Salve Regina" "Alma Redemptoris Mater" ஆகிய இரண்டும், காலத்தால் அழியாத, அன்னைமரியாப் பாடல்களாக இன்றும் உலகமெங்கும் பாடப்படுகின்றன. ஹெர்மான் வாழும்போதே ‘முத்திப்பேறுபெற்ற ஹெர்மான்’ என்றே மக்கள் இவரை அழைத்தனர். மனித உடல், பார்ப்பதற்கு விகாரமான கட்டமைப்புடன் இருந்தாலும், மனித வாழ்வை மதிக்கச் சொல்லித் தருபவர் ஹெர்மான். புனித வாழ்வுக்கும் சாதனைகளுக்கும் மாற்றுத்திறன் தடையல்ல என்பதைக் கற்றுத் தருபவர் ஹெர்மான். Reichenau தீவில் 1013ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிறந்த முத்திப்பேறுபெற்ற ஹெர்மான் 1054ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.