2014-01-11 15:39:13

மரணதண்டனைகளை முற்றிலும் இரத்து செய்வதற்கான மியான்மார் அரசின் தீர்மானத்துக்கு ஐ.நா. பாராட்டு


சன.11,2014. மியான்மாரில் அனைத்து மரணதண்டனைகளையும் ஆயுள் தண்டனைகளாக மாற்றுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானம், அந்நாட்டில் மரணதண்டனைகளை முற்றிலும் இரத்து செய்வதற்கு இட்டுச்செல்லும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்.
மியான்மாரின் 66வது சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டில் மரணதண்டனைகளை ஆயுள் தண்டனைகளாகவும், இன்னும் சில தண்டனைகளை மனிதாபிமான அடிப்படையில் குறைக்கவும் திட்டமிட்டிருப்பதாக மியான்மார் அரசுத்தலைவர் Thein Sein, இம்மாதம் இரண்டாம் தேதி அறிவித்தார்.
மியான்மார் அரசுத்தலைவரின் இவ்வறிவிப்பு குறித்து ஜெனீவாவில் நிருபர்களிடம் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் தலைவரின் பேச்சாளர் Rupert Colville, 1989ம் ஆண்டிலிருந்து மரணதண்டனைகள் நிறைவேற்றப்படாத மியான்மார் நாட்டுக்கு அரசின் இத்தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது எனத் தெரிவித்தார்.
1948ம் ஆண்டு சனவரி 4ம் தேதி மியான்மார் சுதந்திரம் அடைந்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.