2014-01-11 15:38:23

திருத்தந்தை பிரான்சிஸ் : உண்மையான அருள்பணியாளர் இயேசுவோடு நெருங்கிய உறவு கொண்டுள்ளார்


சன.11,2014. கடவுளால் தமது மக்களுக்காகத் திருப்பொழிவு செய்யப்பட்டுள்ள ஓர் உண்மையான அருள்பணியாளர் இயேசுவோடு நெருங்கிய உறவு கொண்டுள்ளார், இந்த உறவு இல்லாமல் இருக்கும்போது அவ்வருள்பணியாளர் சிலைவழிபாட்டாளராக, Narcissus தெய்வத்தை வணங்குபவராக மாறுகிறார் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் ஜெனோவா உயர்மறைமாவட்ட கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோவுடன் வந்திருந்த அவ்வுயர்மறைமாவட்ட அருள்பணியாளர் குழுவுடன் சேர்ந்து இச்சனிக்கிழமை காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் குருத்துவம் பற்றியே எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளதால் நாம் நிலைவாழ்வைக் கொண்டுள்ளோம் என்று புனித யோவான் தனது முதல் மடலில் கூறியிருப்பதை விளக்கிய திருத்தந்தை, இயேசுவோடு கொண்டுள்ள உறவில் அருள்பணியாளர் சக்தி பெறுவதால் இந்த உங்களின் உறவு எப்படி உள்ளது என்ற கேள்வியையும் அங்கிருந்த அருள்பணியாளர்களிடம் எழுப்பினார்.
இயேசு மக்கள் மத்தியில் புகழ்பெற்று வரும்போது அவர் தனிமையான இடத்துக்குச் சென்று செபித்தார், இது அருள்பணியாளர்களுக்கு உரைகல் போன்று உள்ளது, இயேசுவைக் காண்பதற்குத் தேடுதல் முயற்சியில் இறங்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, குருத்துவ வாழ்வில் இயேசு கிறிஸ்துவுக்கு எத்தகைய இடம் உள்ளது, அவரோடு கொண்டுள்ள உறவு எப்படியுள்ளது போன்ற கேள்விகளையும் தங்களது வாழ்வில் கேட்கத் தூண்டினார்.
இவர் ஓர் அருள்பணியாளர் என மக்கள் சொல்லும் உண்மையான குருவாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள குருக்களைக் காண்பது நல்லது என்றும், இவர்கள் வேறு எதை இழந்தாலும் இயேசுவோடு கொண்டுள்ள உறவை இழக்கக் கூடாது என்றும், இது நமது வெற்றி, இதில் முன்னோக்கிச் செல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.