2014-01-11 15:39:21

இந்தியாவின் ஆறுகளில் நச்சுப்பொருள்கள் கலப்பதற்கு சமய வழிபாடுகளும் காரணம்


சன.11,2014. இந்தியாவின் நீர் விநியோகத்துக்கு, நாட்டின் 400க்கு மேற்பட்ட ஆறுகள் முக்கிய ஆதாரமாக விளங்கும்வேளை, இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட ஆறுகளின் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லையெனவும், குறைந்தது 25 விழுக்காட்டு ஆறுகளை குளிப்பதற்குப் பயன்படுத்த முடியாது எனவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
தொழிற்சாலைக் கழிவுகளையும் வீட்டுக்குப்பைகளையும் கொட்டுதல், மலம்கழித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் ஆறுகள் மாசடைந்துள்ளவேளை, மத வழிபாடுகளும் இந்த நிலைக்கு அதிகமான காரணமாக உள்ளது எனவும் அம்மையம் கூறியுள்ளது.
தெய்வச்சிலைகள், மலர்கள், குடங்கள், இறந்த உடல்களின் சாம்பல்கள் போன்றவற்றை ஆறுகளில் வீசுவது, நீரை மாசுபடுத்துகின்றன எனவும் அம்மையம் கூறியுள்ளது.
அத்துடன், இறந்த சுவாமிஜிக்கள், கர்ப்பிணிப் பெண்கள், தொழுநோயாளிகள் அல்லது பெரியம்மை நோயாளிகள், பாம்பு கடித்தவர்கள், தற்கொலை செய்பவர்கள், 5 வயதுக்குட்பட்ட சிறார், ஏழைகள் போன்றோரின் உடல்களை எரிக்காமல் நீரில் மிதக்கவிடும் ஓர் இந்துமதப் பழக்கத்தையும் அம்மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் முக்கிய நதியாகிய கங்கை, 29 நகரங்கள், 70 சிறிய நகரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராமங்களின் 50 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ளது.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.