2014-01-10 15:42:51

திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை முழுவதும் இறைவனிடம் கையளிக்க வேண்டும்


சன.10,2014. நமது விசுவாசம் அனைத்தையும் இயலக்கூடியதாக ஆக்குகின்றது, இது வெற்றியே, எனினும் நாம் நமது விசுவாசத்தை வாழாவிட்டால் நமக்குத் தோல்வியே கிட்டும் மற்றும், இவ்வுலகின் இளவரசன் உலகை வெற்றி கொள்வான் என்று எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், புனித யோவான் தனது முதல் மடலில் கிறிஸ்தவ வாழ்வின் வெளிப்பாடாக குறிப்பிடும் ‘ஆண்டவரில் நிலைத்திருத்தல்’ என்ற சொற்றொடரை மையப்படுத்தினார்.
உண்மையான விசுவாசம் முழுமையானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும், அது ஆண்டவரில், அவரது அன்பில் நிலைத்திருப்பதில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கிய திருத்தந்தை, கடவுளில் நிலைத்திருப்பவர், அவரது அன்பில் நிலைத்திருப்பவர் இவ்வுலகை வெற்றி காண்கிறார் என்று கூறினார்.
கனானேயப் பெண், பிறவியிலேயே பார்வையின்றி இருந்தவர் போன்றோரின் விசுவாசத்தை இயேசு பாராட்டியுள்ளார் என்றும், ஆழமான விசுவாசமுள்ளவர்கள், கடுகுவிதைகூட மலைகளை நகரச்செய்யும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள், இத்தகைய விசுவாசத்துக்கு அறிக்கையிடுதல், நம்மையே கையளித்தல் ஆகிய இரு மனநிலைகள் தேவை எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கடவுளிடம் கேட்கவும், அவரிடம் நன்றி சொல்லவும் அறிந்திருக்கிறோம், ஆனால் அவரை வழிபடுவதும் அவரைப் போற்றுவதும் இவற்றைவிட இன்னும் மேலானவை என்று மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசமுள்ள ஒவ்வொருவரும் கடவுளிடம் தங்களை முழுமையாகக் கையளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.