2014-01-09 14:57:22

புனிதரும் மனிதரே : படிப்பறிவின்மையும் புனிதமும்


ஒருமுறை ஆப்ரிக்க புனித பெனடிக்ட் தன்னிடம் துறவுப் பயிற்சி பெற்ற இளம் மாணவர் செய்த தவறுக்காக ஒரு தவச்செயலைச் செய்யப் பணித்தார். அப்படிச் சொல்லி முடித்தவுடன் பெனடிக்ட் உடனடியாக அந்த இளம் மாணவர் முன்பாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார். அந்த மாணவர் ஒன்றும் புரியாமல் திகைத்தபோது பெனடிக்ட் சொன்னார் : ஒருவர் குற்றம் புரிந்தால் அதற்கு அந்த நபர் மட்டும் பொறுப்பு அல்ல என்று. ஒருவர் தவறு செய்வதற்கு மற்றவரும் ஒருவகையில் காரணம் என்பதை இச்செயல்மூலம் உணர்த்தினார் பெனடிக்ட். இவரின் பெற்றோர், 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலியின் மெசினா நகருக்கு அருகிலுள்ள San Fradello எனும் சிறிய கிராமத்துக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள். அடிமைகளுக்குப் பிறந்த பெனடிக்ட் பள்ளிக்குச் செல்லவில்லை. அதனால் கல்வியறிவையும் பெற்றிருக்கவில்லை. தனது பெற்றோருடன் சேர்ந்து தாழ்மையான வேலைகளை, குறைந்த கூலிக்குச் செய்து வந்தார். கடினமாக நிலத்தில் உழைத்து அதிலிருந்து கிடைத்த பணத்திலிருந்து இரு காளை மாடுகளை வாங்கினார். அதை ஒரு பெருமையாகவே இவர் கருதினார். இவருக்கு 21 வயது நடந்தபோது அனைவரும் இவரை கருப்பர் என்று அதிகமாகவே கேலி செய்தனர். இதில் இவர் காட்டிய பொறுமையைக் கண்ட துறவிகள் குழு ஒன்று இவரைத் தங்களோடு சேர்த்துக்கொண்டது. படிப்பறிவே இல்லாத பெனடிக்ட், துறவு இல்லத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பணி முடிந்ததும் சமையல் வேலையை மகிழ்வோடு செய்து வந்தார். புனித பெனடிக்ட் ஆப்ரிக்கர் என அழைக்கப்படும் இவர், புனித பெனடிக்ட் மோரோ எனவும் அழைக்கப்படுகிறார். "il Moro" என்றால் இத்தாலிய மொழியில் கருப்புநிறத் தோலையுடையவர் என்று பொருள். புனித பெனடிக்ட், ஆப்ரிக்கர்(1526-1589) அவர்களின் விழா ஏப்ரல் 3.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.