2014-01-09 15:49:00

நற்செய்தியின் வழி அரசியல் தலைவர்களை உருவாக்கும் பணியில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வலியுறுத்தல், கர்தினால் டர்க்சன்


சன.09,2014. நற்செய்தியின் வழி இவ்வுலகை வழிநடத்தும் அரசியல் தலைவர்களை உருவாக்கும் பணியில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈடுபடவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டின் Davao நகரில் சனவரி 9, இவ்வியாழனன்று துவங்கிய, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் தேசிய கருத்தரங்கின் துவக்க விழாவில், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்கள், ஆய்வு, சமுதாய ஈடுபாடு, கல்வி புகட்டுதல் ஆகிய மூன்று இலக்குகளைக் கொண்டு செயல்படவேண்டும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட 'Pacem in Terris' என்ற சுற்றுமடலையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட 'Evangelii Gaudium' என்ற திருத்தூது அறிவுரை மடலையும் தன் உரையில் மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வர்த்தக உலகம் வகுக்கும் வழிகளிலிருந்து மாணவ, மாணவியரைத் திசைதிருப்பி, நன்னெறி வழிகளில் அவர்களை நடத்துவது கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் முக்கியமான கடமை என்பதை வலியுறுத்தினார்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் முன்னாள் தலைவர், கர்தினால் François-Xavier Nguyen Van Thuân அவர்கள், "அரசியல் தலைவர் பேறுபெற்றோர்" என்ற சொற்களுடன், வெளியிட்ட எட்டு 'பேறுபெற்றோர்' வரிகளை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வாசித்தார்.
இவ்வுலகம் இருக்கும் நிலை, குறிப்பாக, வறியோரின் வாழ்வு இவற்றால் பாதிக்கப்படும் நல்ல மனசாட்சி கொண்ட அரசியல் தலைவர்களை இறைவன் இவ்வுலகிற்குத் தரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பிய வேண்டுதலின் ஒரு பகுதியை தன் உரையின் இறுதியில் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செபமாக வாசித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.