2014-01-09 15:47:48

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ அன்பு செயல்களில் வெளிப்படும் உண்மையான அன்பு


சன.09,2014. கிறிஸ்தவ அன்பு சொற்களைக் காட்டிலும் செயல்களில் வெளிப்படும் உண்மையான அன்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 9, இவ்வியாழனன்று காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் புனித யோவான் எழுதிய திருமுக்த்தில் வாசிக்கப்பட்ட வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்தவ அன்பு, உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை வெளிப்படுத்தும் அன்பு அல்ல என்றும், பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தும் அன்பு என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இவ்வுலகம் காட்டும் அன்பு மேலோட்டமானது, பொய்யான தெய்வ வழிபாடு போன்றது மற்றும் தன்னையே மையப்படுத்துவது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனில் தங்கி இறையாவியை மையப்படுத்தும் அன்பு முற்றிலும் வேறானது என்று கூறினார்.
பசித்தோருக்கு உணவளிப்பது, நோயுற்றோரைக் காணச் செல்வது போன்ற நடைமுறை வாழ்வுச் செயல்களில் இந்த அன்பு அடங்கியுள்ளது என்பது புனித யோவானின் திருமுகமும், நற்செய்தியும் இன்று விளக்குகின்றன என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நடைமுறைச் செயல்களில் வெளிப்படும் இந்த அன்பு நாளை என்பதைவிட இன்றே மேற்கொள்ளப்படும் செயல்களில் அடங்கியுள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், "வறுமையில் பிறந்த இறைமகனின் தாழ்ச்சியை நாம் தியானிப்போம்; நலிவுற்றோருடன் அவர் தன் வாழ்வைப் பகிர்ந்ததை நாமும் பின்பற்ற முயல்வோம்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.