2014-01-08 15:31:56

திருத்தந்தையின் புனித பூமி பயணம், கீழை வழிபாட்டு முறை சபைகளும் கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து வர சிறந்த வாய்ப்பு


சன.08,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே மாதம் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம், கீழை வழிபாட்டு முறை சபைகளும் கத்தோலிக்கத் திருஅவையும் இன்னும் நெருக்கமாக இணைந்து வர மற்றுமொரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
சென்ற மார்ச் மாதம் 19ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றத் திருப்பலியில் Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் கலந்துகொண்டது, 1054ம் ஆண்டுக்குப் பிறகு, வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்தது.
திருப்பலிக்குப் பின்னர் திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் திருத்தந்தையும், தானும் இணைந்து புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்ளும் ஆவலை வெளியிட்டார்.
முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களின் இந்த ஆவலை நிறைவேற்றும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேமில் அமைந்துள்ள புனிதக் கல்லறைக் கோவிலில் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுடன் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1054ம் ஆண்டு கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்பட்ட திருஅவை, 50 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தால் மீண்டும் இணைந்துவரும் வாய்ப்பு பெற்றது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.