2014-01-08 15:33:42

திருத்தந்தையின் Evangelii Gaudium திருத்தூது அறிவுரையை மையமாகக் கொண்டு, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு


சன.08,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட Evangelii Gaudium, அதாவது, நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரையை மையமாகக் கொண்டு, சனவரி 14, வருகிற செவ்வாயன்று உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை வழங்கியுள்ள இந்த அறிவுரை மடலை எவ்விதம் அணுகுவது? இந்த மடலில் காணப்படும் எண்ண ஓட்டங்கள் யாவை? இதனை வாசிப்பதற்குத் தேவையான மனநிலை என்ன? என்ற கேள்விகள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
நன்னெறி இறையியல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கவிருக்கின்றனர்.
நமது இறையியல், பல்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைத்து வளர்ச்சி அடைய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மடலில் குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப, இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று இப்பல்கலைக் கழகத்தின் நன்னெறி இறையியல் துறைத் தலைவர் இயேசு சபை அருள் பணியாளர் Miguel Yáñez அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.