2014-01-08 15:22:09

அமைதி ஆர்வலர்கள் – முன்னுரை


சன.08,2014. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்று இயேசு திருவாய் மலர்ந்தருளினார். இன்று எந்த மொழி தினத்தாள்களைப் பார்த்தாலும், குண்டுவெடிப்புகள், வன்முறை இறப்புகள் பற்றிய செய்திகள் நம் கண்களிலிருந்து தப்புவதில்லை. ஆப்கானிஸ்தானில் எட்டு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குரிய அங்கியை அணிந்திருந்தார் என்று கூறி அவரைக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். இவ்வளவுக்கும் அச்சிறுமி அணிந்திருந்த தற்கொலைத் தாக்குதல் அங்கியில், வெடிக்கச் செய்வதற்குரிய விசையை அவரால் கையாள முடியவில்லை என்று அச்சிறுமியை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இது இத்திங்கள் செய்தி. உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது. இருபெரும் போர்களிலிருந்து இன்னும் உலகம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கண்ணுக்குக் கண் என்று செயல்படுவது உலகம் முழுவதையும் பார்வையற்ற நிலையில் வைக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார். சகோதரத்துவப் பண்பை மக்கள் கடைப்பிடித்தால் உலகில் அமைதி வரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014ம் ஆண்டுக்கான உலக அமைதி தினச் செய்தியில் சொல்லியுள்ளார். எனவே அமைதிக்காக உழைத்தவர்கள் வாழ்வு பற்றி வழங்குவதன்மூலம் அன்புநெஞ்சங்களாகிய உங்களிலும் அமைதிக்காக உழைப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டலாம் என்றெண்ணி, இந்தப் புதிய தொடரை புதிய ஆண்டில் தொடங்குகின்றோம். அதிலும், அமைதிக்காக நொபெல் விருது பெற்றவர்களை மட்டுமே இத்தொடரில் வழங்கவிருக்கின்றோம்.
நொபெல் அமைதி விருதுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. சுவீடன் நாட்டைச் சார்ந்த ஆல்ஃபிரட் நொபெல் என்பவர் ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளர், பொறியியலாளர், ஆயுதங்கள் தயாரிப்பவர். இவர்தான் டைனமைட்டைக் கண்டுபிடித்தவர். Bofors துப்பாக்கி மற்றும் பிற கனரக ஆயுதத் தொழிற்சாலையின் உரிமையாளராக 1894ம் ஆண்டிலிருந்து 1896ம் ஆண்டுவரை இருந்தவர். இவர் பெரிய தொழிலதிபர். சுவீடனில் 1646ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த Bofors தொழிற்சாலை, 350க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இரும்புத் தயாரிப்பு தொழிற்சாலையாகவே இருந்தது. பின்னர்தான் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றப்பட்டது. ஆல்ஃபிரட் நொபெலின் மொத்தக் குடும்பமே ஆயுதங்கள் தயாரித்தது. 1853ம் ஆண்டு முதல் 1856ம் ஆண்டுவரை இடம்பெற்ற Crimean போருக்கு இக்குடும்பமே ஆயுதங்களை வழங்கியது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள இக்குடும்பத்தின் நிறுவனங்களை மேற்பார்வையிடுவதற்காக ஆல்ஃபிரட் நொபெல் அடிக்கடி பயணம் செய்வார். ஆனால் பாரிசில் நிலையான வீட்டைக் கொண்டிருந்தார். 1888ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஆல்ஃபிரட் நொபெலின் சகோதரர் லுட்விக் நொபெல் இறந்துவிட்டார். அந்த இறப்பு செய்தியை பிரசுரித்த ப்ரெஞ்ச் தினத்தாள் ஒன்று, "மரண வியாபாரி இறந்தான்"(“The Merchant of Death is Dead") என்ற தலைப்பில் ஆல்பிரட் பற்றி தாறுமாறாக எழுதியிருந்தது. ஆல்பிரட் அந்தச் செய்தியைத் தொடர்ந்து வாசித்தார். தன்னைப் பற்றி பத்திரிகை உலகம் என்ன நினைக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார். வெடிமருந்தைக் கண்டுபிடித்த இவர், பல்லாயிரம் உயிர்களைக் கொன்று பணம் திரட்டும் ஒரு பயங்கர மனிதர் என்பதைச் செய்திகள் பல வடிவங்களில் சொல்லியிருந்தன. இதில் மனம்மாறினார் ஆல்ஃபிரட் நொபெல். திருமணமாகாத இவர் நொபெல் விருதுகளை உருவாக்கி தனது சொத்துக்கள் அனைத்தையும் அவ்விருதுகளுக்காக எழுதி வைத்தார்.
நொபெல் அமைதி விருது, ஐந்து நொபெல் விருதுகளில் ஒன்றாகும். "நாடுகளிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுத்தவர், நாடுகளில் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவர், அமைதி மாநாடுகள் நிகழவும் அவற்றை ஊக்குவிக்கவும் காரணமானவர்".. இத்தகைய நபருக்கு அமைதிக்கான விருது வழங்கப்படவேண்டும் என ஆல்ஃபிரட் நொபெல் தனது உயிலில் எழுதி வைத்துள்ளார். இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை 5 பேர் கொண்ட நார்வே குழுவிடம் அவர் ஒப்படைத்தார். இந்தக் குழு நார்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. வேதியல், இயற்பியல், உயிரியல் அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்குவதோடு அமைதிக்கும் விருது வழங்குவதற்கு அவர் விரும்பிய காரணம் தெளிவாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. டைனமைட், ballistite என்ற புகையற்ற வெடி மருந்துத்தூள் உட்பட இவரது கண்டுபிடிப்புக்கள் இவரது காலத்திலேயே வன்முறைக்குப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டார். ஆல்பிரட் நொபெல், நொபெல் விருதை உருவாக்குவதற்கெனத் தனது சொத்துக்களை மூலதனமாக வைக்கும் மரண உயிலில் பாரிசிலுள்ள சுவீடன்-நார்வே அமைப்பில் 1895ம் ஆண்டில் கையெழுத்திட்டார். 1896ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அவர் இறந்தார்.
ஆல்பிரட் நொபெலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதியன்று ஒவ்வோர் ஆண்டும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னிலையில் இந்த அமைதி விருது வழங்கப்படுகிறது. மற்ற நான்கு விருதுகளும் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. நொபெல் அமைதி விருது 1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து 2013ம் ஆண்டுவரை 94 தடவைகள், 101 தனிப்பட்ட நபர்களுக்கும், 25 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் 1917, 1944, 1963 ஆகிய மூன்று ஆண்டுகளிலும், ஐ.நாவின் அகதிகள் நிறுவனம் 1954, 1981 ஆகிய இரு ஆண்டுகளிலும் இவ்விருதைப் பெற்றுள்ளன. முதல் உலகப்போர் நடந்த காலத்தில், 1914 முதல் 1916 வரையிலும், இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் 1939 முதல் 1943 வரையிலும், 1923, 1924, 1928, 1948, 1955, 1956, 1966, 1967, 1972 போன்ற ஆண்டுகளிலும் நொபெல் அமைதி விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. அவ்வாண்டுகளில் அவ்விருதுப் பணம் சிறப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் நொபெல் அமைதி விருதுக்கென அவ்விருதுக் குழுவுக்குப் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். 2014ம் ஆண்டுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பெயர் 1937, 1938, 1939, 1947 ஆகிய ஆண்டுகளிலும், 1948ம் ஆண்டு சனவரியில் அவர் கொல்லப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னரும் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவருக்குக் கொடுக்கப்படுவதற்கு முன்னர் அவர் இறந்ததால் பலரால் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. எனவே, இவ்வாண்டில் இவ்விருது பெறத் தகுதிவாய்ந்த வாழும் நபர் யாரும் இல்லையென அறிவித்து, 1948ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது யாருக்கும் அளிக்கப்படவில்லை. இந்த விருதின் 106 வருட வரலாற்றில் மிக அதிகமாகத் தவிர்க்கப்பட்டவர் மகாத்மா காந்தி என, 2006ம் ஆண்டில் நார்வே குழுச் செயலர் GeirLundestad கூறினார். 1989ம் ஆண்டில் தலாய்லாமா இவ்விருதைப் பெற்றபோது, மகாத்மா காந்தியின் நினைவாகவும் இவ்விருது வழங்கப்படுவதாக அக்குழு தெரிவித்தது. 1979ம் ஆண்டில் அன்னை தெரேசா பெற்றார். நொபெல் அமைதி விருது பெற்றுள்ள ஆர்வலர்கள் வரலாறு தொடரும்.







All the contents on this site are copyrighted ©.