2014-01-07 15:16:44

விவிலியத் தேடல் காணாமற்போனவை பற்றிய உவமைகள் : பகுதி-8


RealAudioMP3 கடந்த ஆண்டு, சனவரி 9ம் தேதி நம் விவிலியத் தேடல் நிகழ்ச்சியில் ஒரு புதிய முயற்சியைத் துவக்கினோம். இயேசுவின் உவமைகள் என்ற அந்தப் புதிய முயற்சியை, கடந்த ஆண்டு 50 வாரங்கள் நாம் மேற்கொண்டோம். கதை வடிவில் இயேசு பகர்ந்த உவமைகளில் நம் தேடல்களை இதுவரை நடத்தி வந்துள்ளோம். ‘கருணையின் நற்செய்தி’ என்று புகழ்பெற்றுள்ள லூக்கா நற்செய்தியில் காணப்படும் அற்புதமான கதைகளில் நம் தேடல் பயணம் நீடித்து வருகிறது.
'நல்ல சமாரியர்' என்ற புகழ்மிக்க உவமையில் இப்பயணம் துவங்கியது. நள்ளிரவில் வந்த நண்பர், நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும், அறிவற்ற செல்வன், முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர், செல்வரும் இலாசரும், காணமற்போன ஆடு, காசு, மகன் என்ற ஒன்பது கதைகள் வழியே நம் தேடல் பயணம் இதுவரை தொடர்ந்துள்ளது. கதை வடிவில் அமைந்துள்ள இவ்வுவமைகள் அனைத்தும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள அற்புத அணிகலன்கள் என்பது தனிப்பட்டச் சிறப்பு.
விவிலியம் என்பது, அள்ள அள்ள குறையாத ஓர் அமுதசுரபி, அளவற்ற ஓர் ஆழ்கடல் என்பதை நம் மனதில் மீண்டும் ஒரு முறை பதிக்கவே நாம் இதுவரை கடந்துவந்த பயணத்தை நினைவுகூர்ந்தோம். 2014ம் ஆண்டினைத் துவக்கியுள்ள இவ்வேளையில், காணாமற்போனவை பற்றிய உவமைகளில் நம் தேடல் தொடர்கின்றது.

காணாமற்போனவை பற்றிய கதைகளை இயேசு சொல்வதற்கு முக்கியக் காரணம்... அவர்மீது மதத்தலைவர்கள் சுமத்திய பழி. "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" (லூக்கா 15:2) என்று பரிசேயரும் மறைநூல் அறிஞரும் தங்களுக்குள் முணுமுணுத்ததால், இயேசு இக்கதைகளைக் கூற நேர்ந்தது என்று லூக்கா நற்செய்தி 15ம் பிரிவின் துவக்க வரிகளில் நாம் வாசிக்கிறோம்.
காணாமற்போன ஆடு, காசு ஆகியவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன என்பதையும், காணமற்போன மகன் மீண்டும் இல்லம் திரும்பினார் என்பதையும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் சிந்திக்கும்போது இவை ஆறுதல்தரும் கதைகளாக ஒலிக்கின்றன. ஆயினும், இயேசு இக்கதைகளின் வழியே அன்றைய சமுதாய அவலங்களையும் வெளிக்கொணர்ந்து, மக்கள் முன், குறிப்பாக, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் முன் சவால்களை வைத்தார் என்ற கண்ணோட்டத்துடன் நாம் இந்த உவமைகளை அணுகுவது பயனளிக்கும்.

'காணமற்போன ஆடு' என்ற உவமையை இயேசு ஆரம்பித்தவிதமே, அங்கிருந்த மதத் தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். "இடையர் ஒருவரிடம் நூறு ஆடுகள் இருந்தன" என்று ஒரு பொதுவானக் கதையாக ஆரம்பிக்காமல், இயேசு இவ்வுவமையை, வித்தியாசமாக ஆரம்பித்தார். இதோ, இவ்வுவமையின் ஆரம்ப வரிகள்:
லூக்கா நற்செய்தி 15:3-4
அப்போது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?”

'உங்களுள் ஒருவரிடம்' என்ற வார்த்தைகளுடன் இந்த உவமையை ஆரம்பித்ததால், தன்னைச் சுற்றியிருந்த அனைவரையும் இயேசு இக்கதையின் நாயகர்களாக்கிவிடுகிறார். இயேசுவைச் சூழ்ந்து அமர்ந்திருந்த எளிய மக்கள், இந்த ஆரம்ப வரிகளைக் கேட்டு மகிழ்ந்திருப்பர். தங்களை இடையர்களாக உருவகித்துக் கொள்வது, அம்மக்களுக்கு மகிழ்வைத் தந்திருக்கும். இஸ்ரயேல் குலத்தின் ஒப்பற்ற தலைவர்களென அவர்கள் கருதிய மோசேயும், மன்னன் தாவீதும் இடையர்கள் என்பது அவர்களது மகிழ்வுக்கு முக்கியக் காரணம். அதிலும் குறிப்பாக, மோசே, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோதுதான் இறைவன், எரியும் முட்புதர் வழியாக அவரைச் சந்தித்தார் என்ற வரலாற்று நினைவு அவர்களின் மகிழ்வை பல மடங்காகக் கூட்டியிருக்கும். அதிலும் மிகச்சிறப்பாக, அவர்கள் பாடிவந்த திருப்பாடல்களில் இறைவனையே இடையராக உருவகித்துப் பாடிவந்தனர். எனவே 'உங்களை இடையர்களாகக் கற்பனை செய்து பாருங்கள்' என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு அவர்களுக்கு நிறைவையும், மகிழ்வையும் தந்திருக்கும்.
ஆனால், இயேசு விடுத்த இந்த அழைப்பு, பரிசேயர்களையும், மதத் தலைவர்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கும். தங்களை இடையர்கள் என்ற நிலையில் சிந்தித்துப் பார்க்க அவர்களுக்கு அருவருப்பாக இருந்திருக்கும். அதை ஓர் அவமானமாகக் கருதியிருப்பர். இடையர், அல்லது, ஆயர் என்ற உன்னதமான ஓர் அடையாளம் காலப்போக்கில் மதத் தலைவர்கள் மத்தியில் மறக்கப்பட்டது, மறுக்கப்பட்டது என்றே சொல்லவேண்டும். ஆடுகளை, குறிப்பாக, நோயுற்ற ஆடுகளைத் தோள்மீது சுமந்து வருவது, ஆடுகளின் தோல் மீது அமர்ந்து, இரத்தத்தை உறுஞ்சும் பூச்சிகளை அகற்றுவது என்ற பணிகளில் இடையர்கள் ஈடுபட்டதால், மதத் தலைவர்களைப் பொருத்தவரை இடையர்கள் தீட்டுப்பட்டவர்கள், எனவே, ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் பார்வையில், இடையர்கள் மனித குலத்திலிருந்தே மறக்கப்பட்ட, தொலைக்கப்பட்ட ஒரு பிரிவினராக மாறிவிட்டனர்.
மதத் தலைவர்கள், இடையர்களை இவ்விதம் நடத்துவதை இயேசு கண்கூடாகக் கண்டவர் என்பதால், இடையர்கள் மீது இயேசுவுக்குத் தனி அக்கறை இருந்தது. எனவே, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இடையர்களை, தன் போதனைகளில் எடுத்துக்காட்டாக மாற்றினார். காணமற்போன ஆடு உவமையில், மக்கள் அனைவரையும் கற்பனையிலாவது இடையர்களாக மாறும்படி அழைத்தார். மதத் தலைவர்கள் மீண்டும் மனம் மாறுவதற்கு இயேசு இந்த அழைப்பைத் தந்தாரோ என்று எண்ணிப் பார்க்கலாம். 'காணமற்போன ஆடு' என்ற இந்த உவமையில், ஆடு மட்டும் காணாமற் போகவில்லை, அந்த ஆடுகளின் உரிமையாளரான இடையரும் இஸ்ரயேல் மக்கள் குலத்திலிருந்து காணாமற் போனவர்தான் என்பதை இயேசு சுட்டிக் காட்டுவதாக நாம் உணரவேண்டும்.
அண்மையில் நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடினோம். மீட்பர் பிறந்துள்ளார் என்பது இந்த விழாவின் மையமான நற்செய்தி. இந்த நற்செய்தியை வானதூதர் இவ்வுலகிற்கு அன்றிரவு கொணர்ந்தபோது, அது முதன்முதலாக யாருக்கு வழங்கப்பட்டது? இடையர்களுக்கு! கிறிஸ்மஸ் பெருவிழாவின் நள்ளிரவுத் திருப்பலியில் இந்த நற்செய்தியைத்தான் நாம் கேட்டோம். லூக்கா 2: 1-14

இந்த நற்செய்தியில் இரு காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. பெத்லகேம் என்ற ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியும், ஊருக்கு வெளியே வயல்வெளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் இந்த நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளன. இக்காட்சிகளை கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் கேட்கும்போது, மனதுக்கு இதம் தரும் காட்சிகளாகத் தெரிகின்றன.
ஆனால், இவ்விரு காட்சிகளிலும் அன்றைய சமுதாய அவலங்கள் சில மறைமுகமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. உலகின் மீட்பர் பிறப்பதற்கு பெத்லகேம் ஊரில் ஒருவர் வீட்டிலும் இடம் இல்லை, விடுதியிலும் இடம் இல்லை. ஊருக்கு வெளியே மிருகங்கள் தங்கும் தொழுவத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. மக்கள் கணக்கெடுப்பிற்காகக் கூடியிருந்த மக்கள் தங்கள் உறவினர்களை வரவேற்பதிலும், சந்திப்பதிலும் மிக அதிகமாக ஈடுபட்டிருந்ததால், அவர்களைத் தேடி வந்த இறைவனை அவர்கள் தொலைத்துவிட்டனர் என்பதை ஊருக்குள் நிகழ்ந்த முதல் காட்சி கூறுகிறது.
முதல் கிறிஸ்மஸ் அன்று நிகழ்ந்தது, ஒவ்வோர் ஆண்டும் நிகழ்கிறதோ என்ற சங்கடமான கேள்வி, கிறிஸ்மஸ் விழா முடிந்ததும் நம் மனங்களில் எழுகின்றது. அலங்காரங்கள், புத்தாடைகள், பரிசுகள், விருந்துகள் என்ற பாணியில் கிறிஸ்மஸை நாம் கொண்டாடியிருந்தால், அங்கு இறைமகன் இயேசுவுக்கு இடம் கிடைத்திருக்குமா என்பது பெரிய கேள்விதான்.

இரண்டாம் காட்சி ஊருக்கு வெளியே வயல்வெளியில் நிகழ்ந்தது. வயல்வெளியில், இரவில், இடையர்கள் தங்கியிருந்தபோது, ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன்வந்து நின்றார்; ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; கிறிஸ்துவின் பிறப்பு முதன் முதலாக இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், வானதூதர்கள் ஓர் அழகான பாடல் பாடினர்.... என்ற விவரங்கள் இந்த இரண்டாம் காட்சியில் தரப்பட்டுள்ளன. நற்செய்தியில் இந்த நிகழ்ச்சியைக் கேட்டபோது, அந்த இடையர்களுக்குக் கிடைத்த ஒப்பற்ற வரத்தை எண்ணி பூரிப்படைந்தோம், கொஞ்சம் பொறாமையும் அடைந்தோம். ஆனால், மற்றொரு கோணத்தில் இந்த நிகழ்ச்சியைச் சிந்திக்கும்போது, மனதில் பல நெருடலான கேள்விகள் எழுகின்றன.
இந்த நற்செய்தியின் முதல் பகுதியில், மக்கள் கணக்கெடுப்பு ஒன்று நடந்துகொண்டிருந்ததாகவும், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யும் கடமையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த முக்கியமான கணக்கெடுப்பில், பெயர் பதிவில் இடையர்களுக்கு இடமில்லையா? மக்கள் கணக்கெடுப்பு நடைபெற்றதென்றால், இடையர்களும் ஊருக்குள் தங்கி தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டுமல்லவா? அதற்குப் பதிலாக, அவர்கள் ஊருக்கு வெளியே, வயல்வெளியில் தங்கியிருந்தனர் என்று நற்செய்தி சொல்கிறதே... அவ்வாறெனில், இந்த இடையர்கள் மக்கள் கணக்கெடுப்பில் கலந்துகொள்வதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றுதானே பொருள்? அவர்களுக்கு அந்த நாட்டு மக்கள் என்ற அடிப்படை அடையாளம் இல்லை என்றுதானே பொருள்?
மக்கள் கணக்கிலிருந்து இடையர்களை விலக்குவதற்கு மற்றொரு காரணமாக நான் எண்ணிப்பார்ப்பது இதுதான்... இடையர்களுக்கு நிலையான ஓர் இடம் இல்லை. மேய்ச்சல் உள்ள இடங்களுக்கு தங்கள் மந்தையை ஓட்டிச்செல்லும் நாடோடிகள் அவர்கள். ஊர் விட்டு ஊர் செல்லும் நாடோடிகளை எந்த ஊரில் கணக்கெடுக்க முடியும்?

நாடோடிகளும், நாடுவிட்டு நாடு துரத்தப்படும் அகதிகளும் அதிகரித்துவரும் இன்றைய உலகில், கிறிஸ்து பிறப்புத் திருவிழாச் செய்தியைக் கேட்ட இடையர்களும், காணமற்போன ஆடு என்ற உவமையில் கூறப்பட்டுள்ள இடையரும் கேள்விகளால் நம் உள்ளங்களை கனமாக்குகின்றனர்.

மனித குலத்தில் இடம்பெற முடியாமல் போன இந்த இடையர்களுக்கு இறைவன் முதலிடம் தருகிறார். தன் தூதர்களை அனுப்பி, அவர்களுக்கு நற்செய்தியை முதலில் அறிவிக்கிறார். மனிதர்கள் என்ற அடிப்படை அடையாளத்தையும், மாண்பையும் இழந்துள்ள இந்த மக்களில் ஒருவராக, தன் மகனை இணைக்கிறார் தந்தையாம் இறைவன்.
இயேசுவும் தன் கதைகளில், உரைகளில் இடையர்களை அடிக்கடி குறிப்பிட்டார். தன்னையே ஓர் இடையராக, ஆயராக அவர் உருவகித்துப் பேசினார். குறிப்பாக யோவான் நற்செய்தி 10ம் பிரிவில் முதல் 18 இறைச் சொற்றொடர்களில் இயேசு தன்னையே ஓர் ஆயனாக விவரிக்கும் வார்த்தைகள் நம் மனதில் எதிரொலிக்கின்றன. இஸ்ரயேல் சமுதாயத்தால் காணாமற்போனவர்களாகக் கருதப்பட்ட இடையர்களை தன் எண்ணங்களிலும் சொற்களிலும் இயேசு சுமந்தார் என்பதற்கு, காணமற்போன ஆடு உவமை மற்றுமோர் அழகிய எடுத்துக்காட்டு.








All the contents on this site are copyrighted ©.