2014-01-07 15:14:29

எருசலேம் முதுபெரும் தந்தை : திருத்தந்தையின் புனிதபூமித் திருப்பயணம் அமைதிக்கான அறைகூவலாக அமையும்


சன.07,2014. வருகிற மே மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதபூமிக்குத் மேற்கொள்ளும் திருப்பயணம், அமைதிக்கான அறைகூவலாக, குறிப்பாக, மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள், சிரியா மக்கள் மற்றும் அனைவருக்கும் அமைதிக்காக அழைப்புவிடுப்பதாக அமையும் எனக் கூறினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.
வருகிற மே 24 முதல் 26 வரை புனிதபூமியின் Amman, பெத்லகேம், எருசலேம் ஆகிய மூன்று நகரங்களில் மூன்று நாள்கள் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, சனவரி 5, கடந்த ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் திருத்தந்தை அறிவித்துள்ளது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முதுபெரும் தந்தை Twal இவ்வாறு தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்வறிவிப்பை வரவேற்றுள்ள அதேவேளை, வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியால் எண்ணிக்கையில் குறைந்துவரும் அரபுநாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தையின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன எனவும் கூறினார் முதுபெரும் தந்தை Twal.
திருத்தந்தையின் இவ்வறிவிப்பு, புனிதபூமிக் கிறிஸ்தவர்கள்மீது திருத்தந்தை கொண்டுள்ள கரிசனையைக் காட்டுகின்றது எனவும் உரைத்த முதுபெரும் தந்தை Twal, தொன்மைக் காலத்தில் இப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிலவிய நல்லுறவை மீண்டும் வலுப்படுத்துவதாக இத்திருப்பயணம் அமையும் என்றும் கூறினார்.
ஜோர்தன் தலைநகர் Amman, மேற்குக்கரை நகரமான பெத்லகேம், எருசலேம் ஆகிய மூன்று நகரங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலிகள் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.