2014-01-07 15:14:46

இலங்கையின் போர்க்காலக் குற்றங்களை ஆய்வு செய்வதற்கு பன்னாட்டுப் புலன்விசாரணை தேவை, மன்னார் ஆயர்


சன.07,2014. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் போர்க்காலக் குற்றங்களை ஆய்வு செய்யும் உள்நாட்டு நடவடிக்கைகளில் இனிமேலும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், இக்குற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு, பன்னாட்டுப் புலன்விசாரணை தேவை என, மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு கேட்டுள்ளார்.
போர்க்காலக் குற்றங்கள் குறித்து ஆய்வுசெய்யும் அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முயற்சிக்கும் பல குருக்களும், வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அச்சுறுத்தப்பட்டு கேள்விகளால் நச்சரிக்கப்படுகின்றனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோசப்.
காவல்துறையும், மனித உரிமைகள் குழுவும் புகார்களை ஏற்க பல நேரங்களில் மறுத்துள்ளன என்று கூறியுள்ள மன்னார் ஆயர், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், காணமாற்போதல், சட்டத்துக்குப் புறம்பேயான கொலைகள் ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலே விடப்பட்டுள்ளனர் என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பன்னாட்டுப் புலன்விசாரணை குழுவை இலங்கை அரசு நிராகரித்துவரும்வேளை, இலங்கையில், கைதுகள், காணமாற்போதல், சித்ரவதைகள், சிறைக்கொலைகள் போன்றவற்றில் பல முரண்பாடான விவகாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோசப்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.