2014-01-06 14:43:05

புனிதரும் மனிதரே : புனித ஆகத்தோ, திருத்தந்தை(678-681)


திருமணமாகி தனது மனைவியுடன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மகிழ்வுடன் வாழ்ந்தவர். புகழ்பெற்ற தொழிலதிபராக, பொருள் வளத்தில் சிறந்து வெற்றிகரமாக வாழ்வை நடத்திக்கொண்டிருந்தவர். அப்படி வாழ்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஆசீர்வாதப்பர் துறவு சபையில் சேரவேண்டுமென்று ஆவல்கொண்டு அப்போதைய திருத்தந்தை புனித பெரிய கிரகோரியாரிடம் அனுமதி கேட்க, இவரது மனைவி அருள்சகோதரியாக, கன்னியர் இல்லத்தில் சேர்ந்தால் இவரும் துறவு மேற்கொள்ளலாம் என்ற பதிலைப் பெற்றவர். எனவே இவரது மனைவியும் துறவறம் பூண்டார். இவரும் ஆசீர்வாதப்பர் துறவு சபையில் சேர்ந்து நிர்வாகத்திலும் பிற காரியங்களிலும் சிறந்து விளங்கினார். எனவே இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் நூறு வயதைக் கடந்த வயதான மனிதராக இருந்தார். கி.பி. 678ம் ஆண்டு முதல் 681ம் ஆண்டு சனவரி 10 வரை திருத்தந்தையாக, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஆற்றிய இவர்தான் புனித ஆகத்தோ (Agatho). இந்த முதிர்ந்த வயதிலும் 6வது பொதுச்சங்கத்தைக் கூட்டி, கிறிஸ்து ஓரே இயல்பையேக் கொண்டிருக்கிறார் என்ற தப்பறைக் கொள்கையைக் கண்டித்து, கிறிஸ்துவின் இரு இயல்புகளையும் உறுதிப்படுத்தியவர். இத்தாலியின் சிசிலித் தீவின் பலேர்மோவில் பிறந்த புனித ஆகத்தோ அவர்கள், Thaumaturgus, அதாவது வியப்பானவற்றைச் செய்பவர் என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது பரிந்துரையால் பல புதுமைகள் நடைபெற்றதே இதற்குக் காரணம். புனித திருத்தந்தை ஆகத்தோ 681ம் ஆண்டு சனவரி 10ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.