2014-01-06 15:18:29

திருத்தந்தை பிரான்சிஸ் - சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் இறைவனைக் கண்டுகொள்ள உதவும் திருவிழா


சன.06,2014. “ஒளியைக் காண ஒளி தேவை” என்ற பொருள்படும் “Lumen requirunt lumine” என்ற இலத்தீன் வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருக்காட்சிப் பெருவிழா காலை திருப்பலியில், தன் மறையுரைத் துவக்கினார்.
சனவரி 6, இத்திங்களன்று இத்தாலியில் கொண்டாடப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், காலை 10 மணிக்குத் திருப்பலியாற்றிய திருத்தந்தை அவர்கள், ஒளியைத் தேடி, ஒளியைப் பின்பற்றிய மூன்று ஞானிகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
மூன்று ஞானிகளைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் படைப்பு, இறைவாக்கு என்ற இரு நூல்களை வாழ்வில் பெற்றுள்ளோம். இவ்விரு நூல்களின் வழியாக இறைவன் தங்களிடம் பேசியதை, மூன்று ஞானிகள் கேட்டு, செயலாற்றியதுபோல நாமும் செவிமடுக்கவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மக்களின் ஒளியாகத் திகழ்வதற்கு அழைக்கப்பட்டிருந்த எருசலேம் நகர், ஒளியின்றி இருந்தது; குறிப்பாக, ஏரோது மன்னனின் அரண்மனை இருளில் மூழ்கியிருந்தது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏரோது மன்னனின் மனதைச் சூழ்ந்திருந்த இருள், அவன் வாழ்ந்த இல்லத்தையும் சூழ்ந்தது என்று சுட்டிக்காட்டினார்.
ஏரோது மன்னனின் அரண்மனையில் இருளை அனுபவித்த மூன்று ஞானிகள், தங்கள் மனதில் ஒலித்த இறைவாக்கினை தொடர்ந்து நம்பியதால், அந்த இருளிலிருந்து மீண்டும் வெளியேறினர்.
இருளின் சக்திகள் விரிக்கும் வலைகளிலிருந்து தப்பிக்கும் வழிகளை மூன்று ஞானிகள் நமக்குச் சொல்லித் தருகின்றனர் என்பதையும் கூறியத் திருத்தந்தை, அவர்களைப் போலவே நாமும், ஒளியைக் காண்பதற்கும், இருளை விலக்கும் தந்திரங்களைத் தெரிந்துகொள்வதற்கும் முயற்சிகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தோற்றங்கள் தரும் ஈர்ப்புக்களில் மயங்கி நாம் உண்மையான ஒளியை இழந்துவிடாமல் இருக்க இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, உலகம் காட்டும் பாதைகளில் மயங்கிவிடாமல், எளிமையில், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் இறைவனைக் கண்டுகொள்ள இந்த விழா நமக்கு உதவட்டும் என்ற வேண்டுதலுடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.