2014-01-04 15:31:19

திருத்தந்தை பிரான்சிஸ் : துறவற சபைகள் உலகைத் தட்டியெழுப்ப வேண்டும்


சன.04,2014. அர்ப்பணிக்கப்பட்ட துறவுவாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள் உலகைத் தட்டியெழுப்ப வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளதாக, La Civiltà Cattolica என்ற உரோமை மையமாகக் கொண்டு இயங்கும் இயேசு சபையினரின் வார இதழில் வெளியான ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற துறவற சபைகள் அதிபர்களின் 82வது பொதுப் பேரவையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், துறவு சபைகளின் 120 அதிபர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புப் பற்றி அந்த இதழின் முதன்மை ஆசிரியர் இயேசு சபை அருள்பணி Antonio Spadaro எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
துறவற வாழ்வு குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கண்ணோட்டத்தை 15 பக்க கட்டுரையாக எழுதியுள்ள அருள்பணி Spadaro, உலகைத் தட்டியெழுப்புங்கள், வாழும்முறையிலும், செயல்களைச் செய்வதிலும் வித்தியாசமாகச் செய்து உலகுக்குச் சாட்சிகளாக இருங்கள், இவ்வுலகில் வித்தியாசமாக வாழ்வது இயலக்கூடியதே என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
திருஅவையில் ஆயர்களுக்கும் துறவிகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து துறவிகள் பேராயமும், ஆயர்கள் பேராயமும் இணைந்து 1978ம் ஆண்டில் வெளியிட்ட Mutuae Relationes என்ற ஏடு மறுபரிசீலனை செய்யப்படுமாறு திருத்தந்தை கேட்டிருப்பதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.
துறவற சபைகள் மறைமாவட்டங்களுக்குத் தேவைப்படுவதால் அச்சபைகளின் தனிப்பட்ட வரங்கள் மதிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாகவும் அந்தக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.