2014-01-03 15:20:18

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரிப்பு, ஆயர்கள் எச்சரிக்கை


சன.03,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் திருஅவைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாக்கும் படைகள் ஒரு மாதத்துக்கு மேலாகப் பணியில் இருக்கின்றபோதிலும், அந்நாட்டில் இன்னும் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படவில்லை என்று அந்நாட்டின் ஆயர் பேரவைச் செயலர் ஆயர் Cyriaque Gbate Doumalo குறை கூறியுள்ளார்.
அந்நாட்டின் அனைத்து ஆலயங்களும் பங்குத்தளங்களும் புலம்பெயர்ந்த மக்களால் நிறைந்துள்ளதால், சில ஆலயங்களில் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட முடியாத சூழல் இருந்ததென, CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஆயர் Doumalo.
Bangui நகரம் முழுவதும் மக்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது என்றுரைத்த ஆயர் Doumalo, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகின்றது என்றும் தெரிவித்தார்.
ஐ.நா. அமைதிகாக்கும் படையின் 1,600 ப்ரெஞ்ச் துருப்புகள் கடந்த டிசம்பர் 8ம் தேதி மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் பாதுகாப்புப் பணியைத் தொடங்கியிருப்பதையும் விடுத்து, தலைநகரில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் புரட்சியாளர்க்கிடையே மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என ஊடகங்கள் கூறுகின்றன.
44 இலட்சம் மக்களைக் கொண்ட மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் மற்றும் 12 விழுக்காட்டினர் முஸ்லீம்கள்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.