2014-01-03 15:19:57

திருத்தந்தை பிரான்சிஸ்:நற்செய்தி மென்மையுடனும் அன்புடனும் அறிவிக்கப்பட வேண்டும்


சன.03,2014. கண்டிப்புடன் அல்ல, மாறாக, மென்மையுடனும் அன்புடனும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று இவ்வெள்ளியன்று ஏறக்குறைய 350 இயேசு சபை அருள்பணியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருப்பெயரின் விழாவான இவ்வெள்ளி காலை, உரோம் நகரிலுள்ள இயேசு சபையினரின் தாய் ஆலயமான ஜேசு ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் என்ற புனித பவுலின் கூற்றை மையமாக வைத்து மறையுரையாற்றினார்.
இயேசு சபையினராகிய நாம், திருச்சிலுவையின் படைத்துறையின் கொடியின்கீழ், இயேசு என்ற பெயருடன் குறிக்கப்பட விரும்புகிறோம் என்றும், இது கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே உணர்வுகளை நாமும் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இப்படி வாழ்வதென்பது இயேசுவைப்போல் சிந்தித்து, அவரைப்போல் அன்புகூர்ந்து, அவரைப்போல் நடந்து, அவரைப்போல் ஒவ்வொன்றையும் நோக்க வேண்டும் என்பதாகும் என்று கூறினார்.
கிறிஸ்துவின் இதயம், அன்புக்காகத் தம்மையே வெறுமையாக்கிய ஒரு கடவுளின் இதயம் எனவும், இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வோர் இயேசு சபையினரும் தங்களையே வெறுமையாக்க வேண்டும், இதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் எனவும் திருத்தந்தை கூறினார்.
இயேசு சபையினர் மனிதர்களாக, தன்னை மையப்படுத்தாத மனிதர்களாக வாழ வேண்டும், ஏனெனில் கிறிஸ்துவும் அவரது திருஅவையும் இயேசு சபையின் மையமாக இருக்கின்றது என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் எப்பொழுதும் நம்மை வியப்பில் ஆழ்த்துபவர், எனவே, இயேசு சபையினராக இருப்பது எண்ணத்தால் திறந்தமனத்தவராய் இருப்பதாகும், இவர்களின் தொலைநோக்கு கடவுளின் அதிமிக மகிமைக்காக மேலும் மேலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நற்செய்தியை அறிவிப்பதில் சோர்வுறக் கூடாது என்றும், அதனைத் துணிச்சலோடு அறிவிக்க வேண்டுமென்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு சபை புனிதர் பீட்டர் ஃபேபர் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வையும் குறிப்பிட்டுப் பேசினார்.
புனிதர் பீட்டர் ஃபேபர், கடந்த டிசம்பர் 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக, புனிதராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றிகூறுவதற்காக இவ்வெள்ளியன்று ஜேசு ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.