2014-01-02 15:49:33

சிரியாவில் கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே வளர்ந்துவரும் பிணைப்பு நம்பிக்கை அளிக்கிறது, அலெப்போ பேராயர்


சன.02,2014. போர், பசி, குளிர் என்ற பல காரணிகளால் மக்கள் மனம் தளர்ந்து போனாலும், கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே வளர்ந்துவரும் பிணைப்பு நம்பிக்கை அளிக்கிறது என்று இயேசு சபையைச் சார்ந்த, கல்தேய வழிபாட்டு முறை அலெப்போ பேராயர் Antoine Audo அவர்கள் கூறினார்.
கிறிஸ்மஸ் வாரம் முழுவதும் தொடர்ந்து விழுந்த குண்டுகளின் தாக்குதல்களில் 500க்கும் அதிகமான உறவினர்களை இழந்து தவிக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது ஆறுதலான அடையாளம் என்று பேராயர் Audo அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
முடிவே தெரியாமல் நீண்டு வரும் சிரியாவின் உள்நாட்டுப் போரினால் மக்கள் மனம் தளர்ந்துள்ள போதிலும், பல இஸ்லாமிய குடும்பங்கள் கிறிஸ்தவர்களுக்கு உதவிகள் செய்ய முன்வருவது நம்பிக்கை அளிக்கிறது என்று பேராயர் Audo அவர்கள் எடுத்துரைத்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் இந்தப் போர் காலத்தில், மதப் பாகுபாடுகள் ஏதுமின்றி, கிறிஸ்தவர்கள் ஆற்றிவரும் பணிகளைக் காணும் இஸ்லாமியர்களில் பலர், தன்னிடம் நேரடியாக வந்து நன்றி சொல்வதையும் காணமுடிகிறது என்று கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Audo அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.