2014-01-01 13:42:46

புனிதரும் மனிதரே 020114


4ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேசிலும் கிரகரியும் நல்ல நண்பர்கள். பேசிலின் தாயும் தந்தையும் புனிதர்கள். பேசிலின் உடன்பிறந்த 9 சகோதர சகோதரிகளுள் 4 பேர் புனிதர்கள். கிரகரியின் தந்தையோ புகழ்பெற்ற ஆயர். இரு நண்பர்களும் புகழ்வாய்ந்த மிகப்பெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பள்ளித்தோழரோ கிரேக்க நாட்டின் வருங்காலப் பேரரசர். வேறென்ன வேண்டும் வாழ்வில்? பெரிய பல்கலைக்கழகங்களில் பயின்று பல்வேறு பட்டங்கள் பெற்றும், ஏதோ ஒரு வெறுமை அங்கு தொக்கியிருந்தது. பேசில், வழக்குரைஞரானார், சட்டப்பேராசிரியரானார். கிரகரியோ தன் தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டு, குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஒரு சூழலில் இருவரும் அனைத்துச் செல்வங்களையும் ஏழைகளுக்கென வழங்கிவிட்டு துறவுக் குழு ஒன்றைத் துவக்கினர். இருவருமே பெரிய போதகர்கள், கல்வி வல்லுனர்கள், அதேவேளை, எழைகள்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். திருடர்கள் மற்றும் விலைமாதுக்களுடன் ஆன்மீக உரையாடி அவர்களின் வாழ்வை மாற்றினர். இருவரும் ஆயர்களான பின்னரும், ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குவதில் மேலும் அதிகக் கவனம் செலுத்தினர். செப வாழ்வோடு, மக்கள் பணியும் இணைந்துச் செல்லவேண்டும் என்பது அவர்களின் வாழ்வுப் போதனையாக இருந்தது. பெரிய பேசில், Nazianusன் கிரகரி என்ற இந்த இரு நண்பர்களும் இன்று கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர்கள் மட்டுமல்ல, திருஅவையின் மறைவல்லுனர்களும் கூட.







All the contents on this site are copyrighted ©.