2014-01-01 13:53:32

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புத்தாண்டு நாளன்று வழங்கிய மறையுரை


சன.01,2014. புலர்ந்துள்ள 2014ம் ஆண்டின் முதல் நாள், இப்புதனன்று கொண்டாடப்பட்ட அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்.
பசிலிக்காவிலும், புனித பேதுரு வளாகத்திலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இன்றையத் திருநாளன்று முதல் வாசகமாக வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை நூலில் காணப்படும் ஆசீர் மொழியுடன் திருத்தந்தை தன் மறையுரைத் துவக்கினார். திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:
இறைவன் மோசேக்கு வழங்கிய இந்த ஆசீர், ஆரோன், அவரது புதல்வர்கள் வழியாக தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது. இறைவன் வழங்கியுள்ள அசீரை இன்று நாம் செவிமடுத்தோம்.
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! (எண்ணிக்கை நூல் 6:24-26) எண்ணிக்கை நூலிலிருந்து ஒலிக்கும் இவ்வார்த்தைகளைக் கேட்பதற்கு புத்தாண்டின் முதல் நாளைப் போல் பொருத்தமான நாள் கிடைக்காது. இந்த நம்பிக்கை, மனிதர்கள் தரும் வாக்குறுதிகளின் மீது அமைந்ததல்ல, இறைவன் தரும் ஆசீரின் மீது அமைந்துள்ளது.
நம்பிக்கை தரும் இந்த ஆசீர், மரியா என்ற பெண்ணிடம் முதன்முறையாக முழுமையாக நிறைவேறியது. மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள பல அடைமொழிகளில், 'இறைவனின் தாய்' என்ற அடைமொழியே முதன்மையும், முக்கியமும் வாய்ந்தது.
கிறிஸ்தவ மக்களின் மனங்களிலும், பக்தியிலும், திருப்பயணங்களிலும் மரியன்னை எப்போதும் வாழ்ந்துவருகிறார். நாம் மேற்கொள்ளும் நம்பிக்கை பயணத்தைப் போலவே மரியாவும் மேற்கொண்டார் என்பதே அவரை நமக்கு மிகவும் நெருக்கமாகக் கொணர்கிறது. துயரங்கள், இருள் சூழ்ந்த நேரங்கள் என்று நாம் மேற்கொள்ளும் உலகப் பயணத்தைப் போலவே அன்னை மரியாவும் இவ்வுலகில் கடினமான பயணம் மேற்கொண்டார்.
கல்வாரி மலையில் இறைமகன் இயேசு தன் அன்னையை நமக்கு அன்னையாகத் தந்த நேரம் முதல், அவரை நம் அன்னையாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தன் மகனை சிலுவையில் பறிகொடுத்த அந்த அன்னை, துயர் நிறைந்த தன் உள்ளத்தை விரிவாக்கி, அவ்வுள்ளத்தில் மனிதர்களாகிய நம் அனைவருக்கும் இடமளித்தார். நல்லவர்கள், பொல்லாதவர்கள் என்ற அனைவரையும் அரவணைக்கும் அன்னையாக மாறினார்.
இந்த அன்னையிடம் நம்மை முழமையாக ஒப்படைப்போம், நமது தேவைகள், உலகின் தேவைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்போம். குறிப்பாக, உலகில் நீதியையும், அமைதியையும் தேடுவோர் அனைவரின் தேவைகளையும் அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறி தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.