2014-01-01 13:54:43

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புத்தாண்டு நாளன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை


சன.01,2014. இறைவனின் தாயான மரியா, மற்றும் உலக அமைதி நாள் என்ற இரு அழகிய பாதைகள் இன்று சந்திக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புத்தாண்டு நாளன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அமைதியையும், அனைத்து நன்மைகளையும் இறைவன் வழங்கவேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் நண்பகல் மூவேளை செப உரையைத் துவக்கினார் திருத்தந்தை.
தன்னைச்சுற்றி நிகழ்ந்ததையெல்லாம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியன்னையை நாம் இன்று நம் உள்ளத்திலும் வரவேற்போம், அவரைப் போல அமைதியை இவ்வுலகில் நிலைநாட்ட நம்மையே அர்ப்பணிப்போம் என்று திருத்தந்தை கூறினார்.
பிறர் மீது கொள்ளும் மதிப்பே உலக அமைதியை உறுதி செய்யும் சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, ஒருவர் மற்றவர் மீது காட்டும் அக்கறையின் அடிப்படையில் உலக அமைதியைக் கட்டியெழுப்புவோம் என்ற உறுதிமொழியை உலக அமைதி நாளன்று அனைவரும் மேற்கொள்வோம் என்று வலியுறுத்தினார்.
அன்னையின் பரிந்துரையால், இவ்வுலகம் வன்முறைகள் அனைத்தையும் களைந்து வாழும் வரம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
மூவேளை செப உரையின் இறுதியில், இத்தாலியின் அரசுத் தலைவர் நாட்டுக்கு அளித்த செய்தியில், தன்னை வாழ்த்தியதற்கு திருத்தந்தை தன் நன்றியைக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.