திருத்தந்தை பிரான்சிஸ் - குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர்
என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல்
டிச.30,2013. ஒரு குடும்பத்தில் வயது முதிர்ந்தோரும், குழந்தைகளும் எவ்விதம் நடத்தப்படுகின்றனர்
என்பதே, அக்குடும்பத்தில் உறவுகள் நலமாக உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்று
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். டிசம்பர் 29, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்குடும்பத்
திருநாளையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த
60,000க்கும் அதிகமான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இவ்வாறு கூறினார். திருக்குடும்பத் திருநாளன்று நற்செய்தியாக வழங்கப்பட்டிருந்த,
இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் எகிப்திற்குத் தப்பித்துச்செல்லும் நிகழ்வைத் தன்
உரையின் மையமாக்கியத் திருத்தந்தை அவர்கள், உலகெங்கும், புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு
உள்ளாக்கப்படும் குடும்பங்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்தார். சொந்த நாட்டிலிருந்து
வேற்று நாடுகளுக்கு அன்னியராக விரட்டப்படும் மக்களை நினைவுகூரும் வேளையில், குடும்பங்களுக்குள்
அன்னியராக நடத்தப்படும் மக்களையும் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்குள் முதியோரும் குழந்தைகளும் எவ்விதம்
நடத்தப்படுகின்றனர் என்பதே குடும்ப நலத்தின் அளவுகோல் என்று கூறினார். பொறுத்துக்கொள்ளுங்கள்,
நன்றி, மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் நலமாக,
மகிழ்வாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, அனைவரையும் அந்த வார்த்தைகளை தன்னோடு
சேர்ந்து சொல்லவைத்ததை, கூடியிருந்தோர் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். நற்செய்தியை
அறிவிப்பது என்ற உயர்ந்த செயல்பாடு ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்து துவங்குகிறது என்று
கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாள் குடும்ப வாழ்வையும் நிறைவுடன் வாழ, அன்னை மரியா, யோசேப்பு,
இயேசு ஆகியோரின் உதவியை நாடுவோம் என்று தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.