2013-12-30 15:08:10

எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு


டிச.30,2013. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் எகிப்தில் அண்மைக் காலங்களில் பெருகிவருவதால், அரசியலைப்பு மாற்றங்கள் தொடர்புடைய மக்கள் கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற கவலையை வெளியிட்டுள்ளனர் எகிப்து கிறிஸ்தவத் தலைவர்கள்.
அண்மைக் காலங்களில் எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்திரு Rafic Greiche, கிறிஸ்தவர்களின் மனங்களில் அச்சத்தை விதைப்பதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் குறித்த கருத்து வாக்கெடுப்பில் அவர்களைப் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருக்க வைப்பதே இஸ்லாமிய தீவிரவாதிகளின் நோக்கம் என்றார்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ வழிபாட்டுமுறையினரின் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள் சனவரி மாதம் 7ம் தேதி இடம்பெற உள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் இருக்கின்றபோதிலும், அச்சமின்றி கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார் அருட்திரு Greiche.
இஸ்லாமியக் குழு ஒன்றை தீவிரவாத அமைப்பு என அறிவித்து எகிப்து அரசு தடைசெய்துள்ளதை ஒட்டியும் அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
எகிப்தில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற சனவரி மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் இடம்பெற உள்ளது

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.