2013-12-28 15:35:41

மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவை, பல்சமயத் தலைவர்கள்


டிச.28,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் இனப் பாகுபாட்டுச் சண்டை ஏற்படும் நிலை உருவாகியிருப்பதால் அந்நாட்டுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga அவர்களும், அந்நாட்டின் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் Oumar Kobine Layama அவர்களும் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.
இந்நாட்டின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Nzapalainga, மத்திய ஆப்ரிக்கக் குடியரசை கிழித்தெறியும் வன்முறைகளும், கொலைகளும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. அமைதி காக்கும் படையினர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
அந்நாட்டின் அரசுத்தலைவர் Francois Bozizé, கடந்த மார்ச் மாதத்தில் Seleka எனப்படும் புரட்சிக்குழுவால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னர், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, முன்னாள் ப்ரெஞ்ச் காலனி நாடாகிய மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உதவியாக, பிரான்ஸ் தனது படைகளை அனுப்பியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.