2013-12-28 15:13:15

கற்றனைத் தூறும் - கரடி பொம்மையும் அமெரிக்க அதிபரும்


கரடி பொம்மை என்றாலே குழந்தைகளுக்குத் தனிப்பட்ட ஆர்வம்தான். கிறிஸ்மஸ் காலத்தில் இந்தப் பொம்மை பெருமளவில் விற்பனையாகும். பெரியவர்கள்கூட ஆசையுடன் வாங்கி வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் கரடி பொம்மைக்கு, ‘டெடி பேர்’ (Teddy Bear) என்ற பெயர் அமைந்ததற்கு, சுவாரசியமான ஒரு பின்னணி உண்டு.
கரடி பொம்மை முதன் முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகமானது. அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். 1902ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று மிசிசிபி பகுதியில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது காயத்துடன் அப்பக்கம் உலவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவர்கள் கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதைச் சுடாமல் விட்டுவிட்டார்.
இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் செய்திகள் வந்தன. தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு ‘டெடி’ என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ரூஸ்வெல்ட்டும் கரடியும் என்ற பொருளில், ‘டெடி பேர்’ என்று பெயர் சூட்டியிருந்தனர். பொம்மை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பரபரப்பை பயன்படுத்திக் கொண்டன. அன்று முதல் ‘டெடி பேர்’ என்பது கரடி பொம்மையின் பெயரானது. அது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி ‘டெடி பேர்’ தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் – தி இந்து








All the contents on this site are copyrighted ©.