2013-12-27 16:21:32

திருத்தந்தை பிரான்சிஸ் Taize இளையோரிடம் : ஐரோப்பாவுக்கு உங்களின் பணியும் விசுவாசமும் தேவைப்படுகின்றன


டிச.27,2013. ஐரோப்பா தற்போது எதிர்நோக்கும் இன்னல்களிலிருந்து வெளிவருவதற்கு இளையோரின் பணியும் விசுவாசமும் தேவைப்படுகின்றன என, Taize இளையோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
பிரான்சின் Strasburgல் ஐரோப்பிய இளையோருக்கென இச்சனிக்கிழமையன்று தொடங்கவிருக்கும் மூன்று நாள் Taize கூட்டத்துக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாண்டின் இக்கூட்டம் பிரான்ஸ், ஜெர்மனி என இரு நாடுகளிலுள்ள Alsace மற்றும் Ortenau மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றுள் ஒரு பகுதி போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது மிகுந்த நம்பிக்கையின் இடமாகத் திகழ்கின்றது என்றும், கிறிஸ்துவை அன்புகூரும் அனைவர் மத்தியிலும் காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பு ஏற்படுவதற்கான வழிகளை இந்த 2014ம் ஆண்டில் தேடுமாறும் இளையோரிடம் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இம்மாதம் 28 முதல் சனவரி முதல் தேதிவரை நடைபெறவிருக்கும் 36வது ஐரோப்பிய இளையோர் கூட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ரைன் நதிக்கு இருபுறமும் உள்ள கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபை மறைமாவட்ட ஆயர்களின் விண்ணப்பங்களின்பேரில் இந்த இளையோர் கூட்டம் Strasburgல் நடைபெறவிருக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.