2013-12-27 15:48:45

டிச.28,2013. கற்றனைத்தூறும்... இராஜ நாகம்


உலகில் பாம்பு வகைகளுள் 15 குடும்பங்களும் 2 ,900 இனங்களும் உள்ளன. இவற்றில் 10 செ.மீ நீளமுள்ள நூல் பாம்பிலிருந்து, 7 .9 மீ நீளமுள்ள அனகோண்டா வரை உண்டு. உலகிலுள்ள பாம்பு இனங்களில் ஒரே ஒரு பாம்பு மட்டும் பறவை போல கூடு கட்டும். அதில் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அதுதான் இராஜ நாகம். இதன் நீளம் 5 .5 மீ. இராஜ நாகத்தில் 200 இனங்கள் உள்ளன.
இராஜநாகத்தின் கண் பார்வை மற்ற பாம்புகளைவிட கூர்மையானது. இராஜ நாகம் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்ளும். பாம்புகள் கிடைக்காவிட்டால், ஓணான், பறவைகள், அணில் போன்றவற்றையும் உண்ணும். மற்ற பாம்புகள் போலவே, இதுவும் பிளவுபட்ட நாக்கின் மூலம் இரையின் வாசனை உணர்ந்து, அது இருக்கும் திசையையும் அறிகிறது. நாகப்பாம்பின் நஞ்சு நேரடியாக நரம்பு மண்டலத்தைத்தான் தாக்கும். உடனே கடுமையான வலி ஏற்படும். அதைத் தொடர்ந்து கண் பார்வை குறைந்து, தலை சுற்றி, உடனடியாக பக்கவாதம் உண்டாகும். இதய இரத்த குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். பிறகு மூச்சு திணறலால் இறப்பு நிகழும். இராஜ நாகம் ஒரு முறை கொத்தும்போது 20 பேரை கொல்லும் அளவுக்கு நஞ்சு அதில் இருக்கிறது. பொதுவாக இராஜ நாகம் கடித்தால் ஒருவர் அதிகபட்சம் 15 நிமிடத்துக்குள் இறந்து விடுவார்.
இராஜநாகம் இந்தியா, மலேசியா, தென்சீனா, வியட்நாம் போன்ற தெற்கு ஆசியப் பகுதிகளிலும், வடக்கு ஆப்ரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப்படுகிறது.

ஆதாரம் : பணிப்புலம்








All the contents on this site are copyrighted ©.