2013-12-27 16:22:06

எருசலேம் முதுபெரும் தந்தை கிறிஸ்தவர்களிடம்:சவால்களுக்கு மத்தியில் விசுவாசத்தில் பற்றுறுதியுடன் வாழுமாறு வேண்டுகோள்


டிச.27,2013. புனிதபூமி கிறிஸ்தவர்கள் மனச்சோர்வால் ஆட்கொள்ளப்படாமல், அமைதி, நீதி மற்றும் ஒப்புரவின் மீது நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டு வாழுமாறு கேட்டுக்கொண்டார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.
இந்த நமது உலகமும், மத்திய கிழக்குப் பகுதியும் அந்த வரலாற்று சிறப்புமிக்க இரவை தியானிக்கும் இவ்வேளையில், நீதியும் ஒப்புரவும் ஏற்படும் என்ற நம்பிக்கையின் சுடர் இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது என்ற உறுதியில் நாம் வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் முதுபெரும் தந்தை Twal.
பெத்லகேம் கிறிஸ்து பிறப்புப் பசிலிக்காவுக்கு அருகிலுள்ள புனித கத்ரீன் ஆலயத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய முதுபெரும் தந்தை Twal, பெத்லகேமிலிருந்தே மீட்புச் செய்தி வந்தது என்பதால், பெத்லகேமில் நம் கண்களைப் பதிப்போம் என்றும், அமைதி இயலக்கூடியதே என, நம் மீட்பராம் இயேசு நமக்குச் சொல்லியிருக்கிறார் என்றும் கூறினார்.
ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்துள்ள மூன்று மதங்களின் இல்லிடமாக புனிதபூமி இருப்பதால், அனைவருக்கும் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்வோம் என, புனிதபூமி கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார் எருசலேம் முதுபெரும் தந்தை Twal.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.