2013-12-26 15:44:41

திருத்தந்தையைப் பற்றிய ஆவணப்படம் Amazon.com இணையத்தளத்தில் மிக அதிக அளவில் விற்பனையாகிறது


டிச.26,2013. இயேசுவின் மீது ஆழ்ந்த அன்புகொள்ளவும், இறைவன் மீது அன்புகொள்ள அயலவரைத் தூண்டவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையை அழைக்கிறார் என்பது “Francis: The Pope From The New World” என்ற ஆவணப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம் குறித்து தன் எண்ணங்களை CNA செய்தியிடம் பகிர்ந்துகொண்ட Los Angeles பேராயர் José Gomez அவர்கள், மனிதரின் உண்மையான மகிழ்வுக்கு வழிகாட்டும் திருத்தந்தையை இந்தப் படம் அழகாக வெளிக்கொணர்ந்துள்ளது என்று கூறினார்.
ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த ஆவணப்படத்தை Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Carl Anderson அவர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
மார்ச் மாதம் 13ம் தேதியன்று, திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் Jorge Bergoglio அவர்களின் பின்னணியைக் குறித்து பலரும் கூறும் கருத்துக்கள் இந்த ஆவணப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று CNA செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், Amazon.com இணையத்தளத்தில் மிக அதிக அளவில் விற்பனையாகும் ஆவணப்படம் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.