2013-12-25 15:12:03

இக்குழந்தை வழியாக கடவுள் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பை உணர முயல்வோம் – திருத்தந்தை வழங்கிய கிறிஸ்மஸ் மறையுரை


டிச.25,2013. டிசம்பர் 24, இச்செவ்வாய் இரவு 9.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி ஆற்றினார். அப்போது அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.” (எசாயா 9 : 2) இறைவாக்கினர் எசாயாவின் இவ்வார்த்தைகள் கிறிஸ்மஸ் இரவில் ஒலிக்கும்போதெல்லாம் நம்மைத் தொடாமல் போவதில்லை. இவ்வார்த்தைகள் வெறும் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் அல்ல, நம் ஒவ்வொருவரின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக இவை இருப்பதால், இந்த மாற்றங்கள் நமக்குள் உருவாகின்றன. நாம் அனைவரும் பயணிக்கும் மக்கள், நமக்குள்ளும், நம்மைச் சுற்றிலும் இருளும் ஒளியும் உள்ளன என்பதே அந்த உண்மை நிலை.
நமது நம்பிக்கையின் தந்தையான ஆபிரகாம் காலம் துவங்கி, இன்றுவரை நாம் பயணிக்கும் மக்களாக இருக்கிறோம். இறைவன் நமக்குக் காட்டும் வாக்களிக்கப்பட்ட உலகை நோக்கி நாம் பயணம் செய்கிறோம். இறைவன் ஒளியாகத் திகழ்கிறார். நாமோ, இருளும் ஒளியும் கலந்தவர்கலாக வாழ்கிறோம். இறைவன் நம் பயணத்தில் ஒருவராகக் கலந்துள்ளார். நம் மத்தியில் அவர் தம் கூடாரத்தை அமைத்துள்ளார்.
இந்தக் கூடாரத்தை முதன் முதலில் கண்டவர்கள் இடையர்களே. அவர்கள் மனித சமுதாயத்தின் விளிம்பில், மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்ததால், அவர்களால் இக்'கூடாரத்தை'க் காண முடிந்தது.
நமது பயணத்தில் பிறந்திருக்கும் குழந்தை முன் அமைதியாக நிற்போம். இக்குழந்தை வழியாக கடவுள் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பை உணர முயல்வோம்.
இந்த இரவில் நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தி 'அஞ்சாதீர்கள்' என்ற நற்செய்தி. இந்த நற்செய்தியை நாம் உலகோர் அனைவரோடும் பகிர்ந்துகொள்வோம். பொறுமையே உருவான இறைவன் நம் பயணத்தை வழிநடத்தி, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு நம்மை அழைத்துச் செல்வாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.