2013-12-23 15:20:10

எருசலேம் முதுபெரும் தந்தையர்களின் சிறப்புச் செய்தி


டிச.23,2013. துன்பம் நிறைந்த சூழல்களின் மத்தியில், கிறிஸ்துவின் ஒளி மிகவும் இருண்ட பகுதிகளிலும் இன்னும் ஒளிவீசிக்கொண்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றோம் என தங்கள் கிறிஸ்மஸ் சிறப்புச்செய்தியில் அறிவித்துள்ளனர் எருசலேம் கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தந்தையர்கள்.
இயேசு பிறந்தபோது மத்தியக் கிழக்குப் பகுதியில் இருந்த அரசியல் நிலையற்றதன்மைகள்போல் தற்போதைய சூழல்களும் உள்ளன என, தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ முதுபெரும் தந்தையர்கள், இறைவனோடு நம்மை ஒப்புரவாக்கமட்டுமல்ல, மனிதர்களை ஒருவர் ஒருவரோடு ஒப்புரவாக்கவுமே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வன்முறைகள் ஒருநாளும் தீர்வாக முடியாது என்பதை தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர் அவர்கள்.
திருக்குடும்பம் எகிப்துக்கு தப்பியோடிய நிகழ்வை, இன்றைய அகதிகளின் நிலைகளோடு ஒப்பிட்டு தங்கள் கவலையை வெளியிடும் எருசலேமின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், தங்கள் சொந்த இடங்களைவிட்டு அகதிகளாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காகவும், அவர்களுக்கு உதவும் முயற்சிகளை மேற்கொள்ளும் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்காகவும் செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.