2013-12-23 15:20:18

ஈராக் நாட்டில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது


டிச.23,2013. டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, ஈராக் நாட்டில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Raphael Louis Sako அவர்கள், ஈராக் பிரதமர், Nouri al-Maliki அவர்களுக்கு, சென்ற வாரம் அனுப்பியிருந்த ஒரு விண்ணப்பக் கடிதத்தின் விளைவாக, இந்த தேசிய விடுமுறைநாள் இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக, ஈராக் நாட்டின் முன்னேற்றத்திற்கென பாடுபட்டு வரும் கிறிஸ்தவ சமுதாயத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஓர் அடையாளமாக இந்த அரசு விடுமுறை அமையவேண்டும் என்று முதுபெரும் தந்தை Sako அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், Tigris நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள Karrada எனும் நகரில், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே பல்லாண்டுகளாய் நிலவிவரும் நல்லுறவைக் காட்டும்வண்ணம், அந்நகர அதிகாரிகள் கிறிஸ்மஸ் மரம் ஒன்றை அந்நகரில் கடந்த வாரம் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.