2013-12-20 15:54:01

திருத்தந்தை பிரான்சிஸ் : வீணாக்கப்படும் உணவு, உலகின் பசியைப் போக்கப் போதுமானது


டிச.20,2013. இன்றைய உலகில் வீணாக்கப்படும் உணவு, உலகில் பசியால் வாடும் எல்லாருக்கும் உணவளிக்கப் போதுமானது என்று, குப்பைகளில் பொருள்களைச் சேகரிக்கும் ஏழைகளுக்கென வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல நகரங்களில் குப்பைமேடுகளில் பொருள்களைப் பொறுக்கி அவற்றிலிருந்து வாழ்க்கை நடத்தும் மக்களை நினைத்து அனுப்பியுள்ள செய்தியில் இந்த ஏழை மக்களின் நலனுக்காக உழைக்கும் பணியாளர்கள், உலகில் வீணாக்கப்படும் உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவை மையமாகக் கொண்டு செயல்படும், ஒதுக்கப்பட்ட பணியாளர் இயக்கம் என்ற அமைப்பினர் நடத்திய கருத்தரங்கிற்கென அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருள்களை மட்டுமல்ல, மனிதரையும் எளிதாகத் தூக்கி எறியும் ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இவ்வுலகில் வீணாக்கப்படும் உணவு, உலகில் பசியால் வாடும் அனைவரின் பசியை அகற்றுவதற்குப் போதுமானது எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.