2013-12-19 17:26:25

திருத்தந்தை அனைத்து மக்கள் மத்தியிலும் பெருமளவான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் - முதுபெரும் தந்தை Kirill


டிச.19,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மக்கள் மத்தியிலும் பெருமளவான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் என்றும், கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் பல விடயங்களில் பொதுவான புரிதலை உருவாக்க முடியும் என்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், டிசம்பர் 14, கடந்த சனிக்கிழமை முதல், டிசம்பர் 19, இவ்வியாழன் முடிய மாஸ்கோவில் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் ஓர் உச்ச கட்டமாக, டிசம்பர் 18, இப்புதனன்று அவர் மாஸ்கோவின் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்தபோது, கத்தோலிக்கத் திருஅவைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நல்லுறவுகள் வளரும் வாய்ப்புக்கள் குறித்து இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மக்கள் மத்தியில் நலமிக்க எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் என்றும், அவர் கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் கண்ணோட்டங்களுடன் ஒன்றித்துச் செல்வது மகிழ்வளிக்கிறது என்று கூறினார்.
கர்தினால் Koch அவர்கள், தன் மாஸ்கோ பயணத்தின்போது, இரஷ்ய அரசு அதிகாரிகள் சிலரையும் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.