2013-12-18 15:28:56

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்: கடவுள் நம்மோடு


டிச.18,2013. உரோமையில் குளிர் நிறைந்திருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகத்தைக் கேட்கவரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருப்பதால், இப்புதன் பொது மறைபோதக நிகழ்வு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலேயே இடம் பெற்றது. இந்நிகழ்வு, இந்த 2013ம் ஆண்டின் இறுதி நிகழ்வு என்பது ஒருபுறமிருக்க, டிசம்பர் 17, இச்செவ்வாயன்று தனது 77வது பிறந்தநாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு திருப்பயணிகள் நல்வாழ்த்துக்களையும் பாடி மகிழ்ந்தனர். அப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்றார். அவர் திறந்த காரில் வளாகத்தில் வலம் வந்தபோது மக்கள் auguri வாழ்த்துக்கள் என்று உணர்ச்சிபொங்கக் கூறினர். ஒருமுறை காரைவிட்டு இறங்கி அங்கிருந்த சிறார் குழுவை வாழ்த்தினார். அர்ஜென்டீனா நாட்டினர் கொடுத்த அந்நாட்டுத் தேனீரையும் அருந்தினார். அவர் காரில் வளாகத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒருவர் பறக்கவிட்ட மாடப்புறா அவரது காருக்கு மேலே தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வத்திக்கான் வளாகத்தில் மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்திருந்த திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விரைவில் நாம் கொண்டாடவிருக்கும் கிறிஸ்மஸ் பெருவிழா பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் RealAudioMP3 . திருத்தந்தை இத்தாலிய மொழியில் வழங்கிய உரையின் ஆங்கிலச் சுருக்கத்தை இப்போது கேட்போம்.
அன்புச் சகோதர சகோதரிகளே, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு, திருவருகைக் காலத்தின் இந்த இறுதி நாள்களில் ஆன்மீகரீதியில் நம்மை நாம் தயாரித்து வருகிறோம். கிறிஸ்மஸ், நம்பிக்கை நிறைந்த மகிழ்வின் விழா. ஏனெனில், கடவுள் தம் திருமகனில் நம்மோடு ஒருவராக மாறியுள்ளார். இத்திருமகன் உண்மையான கடவுளும் மனிதருமானவர். இந்த நம் உலகின் அனைத்துச் சண்டைகள், துன்பங்கள் மற்றும் ஏழ்மையோடு இவ்வுலகின் ஓர் அங்கமாக மாறி நம்மீது அவர் கொண்டிருக்கும் அன்பைக் காட்டினார். இயேசு உண்மையிலேயே இம்மானுவேலர். அதாவது கடவுள் நம் மத்தியில் குடிகொண்டிருக்கிறார். இது கடவுள் நமக்குக் கொணரும் மாபெரும் கொடை. இறையன்பாகிய இக்கொடை, நம் இதயங்களைக் குணப்படுத்தி உருமாற்றுகின்றது. நம் இதயங்கள், அனைத்து நிச்சயமின்மை மற்றும் மனச்சோர்வை மேற்கொள்ளச் செய்கின்றது. கடவுள் நம் மத்தியில் ஒருவராக மாறியிருப்பதுபோல, நாமும் கடவுள்போல மாற அழைக்கப்படுகிறோம் என்பதை, நாம் மகிழ்வோடு தியானிக்கும் கிறிஸ்மஸ் பேருண்மை நமக்கு உணர்த்த வேண்டும். மனத்தாழ்மையோடு வாழவும், பிறரோடு, குறிப்பாக, ஏழைகளோடு நெருக்கமாக இருந்து, அவர்களின் தேவைகள் என்ன என்பதில் கருத்தாய் இருக்கவும் அழைக்கப்படுகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். மனிதரான கடவுளாகிய இயேசுவின் முகத்தை நம் அடுத்தவரில் காண்பதற்கு, இயேசுவின் தாயும் நம் தாயுமாகிய மரியிடம் இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் வரம் கேட்போம். அனைத்து மனிதரின் இதயங்களுக்கும் மகிழ்வையும் அமைதியையும் கொண்டுவந்த பெத்லகேமிலிருந்து சுடர்விட்ட அந்த ஒளியின் கதிர்களாக நாம் இவ்வுலகில் வாழ்வோம்.
RealAudioMP3 இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்துப் திருப்பயணிகளிலும், அவர்களின் குடும்பங்களிலும் கடவுளின் அன்பும் அமைதியும் நிறைந்த ஆசீர் பொழியப்படுமாறு செபித்தார். பின்னர் எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.