2013-12-17 15:06:40

விவிலியத்
தேடல் காணாமற்போனவை பற்றிய உவமைகள் பகுதி-7


RealAudioMP3 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 77வது பிறந்தநாளன்று விவிலியத் தேடல் நிகழ்வு இடம்பெறுவதையும், அந்தத் தேடலில் காணமற்போன மகன் உவமையை நாம் சிந்திப்பதையும் இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஓர் அருள் நிறைந்த வாய்ப்பு என்று நான் கருதுகிறேன். இவ்விதம் நான் சொல்வதற்குக் காரணம் உண்டு.
டிசம்பர் 11ம் தேதி, Times வார இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் (Person of the Year) என்று அறிவித்தது. இவரை Times இதழ் தேர்ந்ததற்கான காரணத்தை, அவ்விதழின் பொறுப்பாசிரியர் Nancy Gibbs என்பவர் இவ்வாறு கூறினார்:
"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து கத்தோலிக்கத் திருஅவையில் 'பிரான்சிஸ் தாக்கம்' (Francis Effect) நிகழ்ந்து வருகிறது. அதாவது, பல ஆண்டுகளாக கோவில் பக்கமே செல்ல விரும்பாத பல கத்தோலிக்கர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் கோவிலுக்குத் திரும்பியுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Times இதழ் தேர்ந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம்" என்று Nancy Gibbs கூறினார்.
தங்கள் சொந்த இல்லமான திருஅவையை விட்டுப் பிரிந்துசென்ற பலர் மீண்டும் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிவரக் காரணமாக இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்தநாளன்று, காணாமற் போய் மீண்டும் இல்லம் திரும்பும் மகனின் உவமையை நாம் சிந்திப்பது பொருத்தம்தானே!

காணாமற்போன மகன் உவமையின் அடிப்படை விவரங்கள் எல்லாருக்கும் தெரியும் என்பதால், இந்தக் கதையின் ஒரு பகுதியை மட்டும் இன்றைய நம் தேடலின் மையமாக்குவோம். அந்தப் பகுதியையும் இரு வேறு கற்பனைகளின் வழியே சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
முதல் கற்பனை இதோ
ஊர் பெரியவர் மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருந்தார்.
இளைய மகன் போனதிலிருந்து இதுவே அவருக்கு வழக்கமாகிவிட்டது.
வெளியில் தலைகாட்ட வெட்கமாயிருந்தது.
மகன் போனபோது, அவனோடு குடும்ப மானமும் போய்விட்டது என்று
முதலில் வருத்தப்பட்டார், நாட்கள் செல்லச் செல்ல கோபப்பட்டார்.
அந்த நாளை நினைக்கும்போதெல்லாம், மனம் கொந்தளித்தது.
"பய எத்தனை நாளைக்கித்தான் சமாளிப்பான்?
என்னைக்காவது எம்முன்னாலே வந்து நின்னுதானே ஆகணும்.
அன்னைக்கி இருக்குது அவனுக்கு..."
இதுவே அவரது தினசரி மந்திரமானது.

அதோ! தூரத்தில், தெருக்கோடியில் ஓர் உருவம்.
பெரியவரின் பார்வை கொஞ்சம் பழுதடைந்திருந்தது.
தினமும் எழுந்த கோபத்தால் அவர் பார்வை இன்னும் கொஞ்சம் இருண்டு போயிருந்தது.
வீட்டுக்குள் சென்று, அவர் முன்பு பயன்படுத்திய ‘பைனாக்குலர்’ கருவியை எடுத்து வந்தார். அந்தக் கருவியைக் கூர்மையாக்கி அந்த உருவத்தின் முகத்தைப் பார்த்தபோது...
மனதில் இருந்த பாறை லேசாகப் பிளந்தது. கொஞ்சம் பாசம் கசிந்தது...
ஆனால், 'சட்'டென்று நிமிர்ந்தார். உள்ளே சென்று தன் இருக்கையில் அழுத்தமாக அமர்ந்து கொண்டார். "வரட்டும் பய. ‘எவ்வளவு சொல்லியும் உதறிட்டு ஒடுனியே. என்னத்தக் கண்ட’ன்னு நாலு வார்த்தை சூடா, முகத்துல அறையிறா மாதிரி கேட்டாத்தான் மனசு ஆறும்."

கீழே இருந்து ஒரு வேலையாள் மூச்சிரைக்க ஓடி வந்தார்.
"ஐயா, ஐயா, கீழே நம்ம சின்ன எசமான்..."
என்று ஆரம்பித்த அவரது பதட்டம், ஆர்வம் எல்லாம்
பெரியவரின் உஷ்ணப்பார்வையில் பொசுங்கிவிட்டன.
வேலையாளின் அறிமுகத்தை ஆரம்பத்திலேயே வெட்டிவிட்டு,
கம்பீரமாகக் கீழிறங்கி
வந்தார். தனது
நாற்காலியில் அமர்ந்தார்.
ஏறக்குறைய அந்தத் தெருவே பெரியவர் வீட்டிற்கு முன்னால் கூடிவிட்டது.
தெருக்கோடியில் சின்னவர் ஒரு பிச்சைக்காரனைப் போல்
சின்னாபின்னமாய் வரும்போதே, செய்தி பரவிவிட்டது.

தன் இளைய மகன் ஊரார் முன்னிலையில் தன்முன் மண்டியிட்டிருப்பதைப் பார்ப்பதற்கு அவமானமாயிருந்தது பெரியவருக்கு.
இருந்தாலும், இதே மகன் இதே கூட்டத்திற்கு முன்னால், தன்னை அவ்வளவு தூரம் எடுத்தெறிந்து பேசிவிட்டுச் சென்றதை நினைக்கும்போது, இந்தக் காட்சி சரியானதொரு பிராயச்சித்தமாகத் தெரிந்தது.

தந்தையைக் கண்டதும், மகனுக்கு (இல்லை, இல்லை... தான் ஒரு மகன் இல்லை என்று அவனே தீர்மானம் செய்துகொண்டு தானே வந்திருந்தான்) அந்த பிச்சைக்காரனுக்கு, வெட்கம், வேதனை, தயக்கம். பசி மயக்கம் வேறு.
தீனமான குரலில், “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்.”
இதை அவன் சொல்லி முடிப்பதற்குள் தொண்டை வறண்டு போனான். வார்த்தைகளில் தெளிவில்லை.

அவன் சொன்னதைப் பெரியவர் ஓரளவு புரிந்து கொண்டார். இருந்தாலும், சூழ நின்றவர்களுக்கும் அவன் சொன்னது கேட்கவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு.
"என்ன சொன்ன? கொஞ்சம் சத்தமா சொல்லு" அவர் மீண்டும் கேட்டார்.
அவனுக்கோ தாகம். தண்ணீர் கேட்டான். கொடுக்கப்பட்டது.
இன்னும் கொஞ்சம் சப்தமாக, “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும்.”
என்று சொல்லி முடித்தான்.
சுற்றி நின்றவர்களுக்கு அவன் சொன்னது கேட்டிருக்கும் என்ற திருப்தி பெரியவருக்கு.
"ம்... இப்பவாவது உனக்கு புத்தி வந்துச்சே!
அன்னக்கி அத்தன வீராப்பா போனியே, என்னத்தக் கண்ட?
நான் சொன்னத அன்னைக்கே கேட்டிருந்தா, இப்படி ஒரு நில வந்திருக்குமா?
இனிமேலாவது, பெரியவங்க சொல்றது நம்ம நன்மைக்கிதான்னு புரிஞ்சுக்கோ...
சொல்றதெல்லாம் கேட்குதா?" என்று உறுதிபடுத்திக் கொண்டார் பெரியவர்.
மகன் மெளனமாக, கண்ணீர் மல்க தலையாட்டினான்.
"ம்! அப்படியே, பின்பக்கமா வந்து, அந்த கந்தலையெல்லாம் கழட்டி எறிஞ்சிட்டு, குளிச்சிட்டு, அப்புறமா வீட்டுக்குள்ள வா!"

தந்தை ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தார்.

இளைய மகன் பசி மயக்கத்தில் தள்ளாடியபடி
வீட்டுக்குப் பின்புறம் சென்றான்.------------------------------------------------------------------------
அன்பு நெஞ்சங்களே, இதுவரை நாம் சிந்தித்தது, இயேசு கூறிய உவமையிலிருந்து வெகுவாக மாறுபட்ட ஒரு கற்பனை.
இப்போது நாம் கேட்கவிருக்கும் கற்பனை இயேசுவின் எண்ணங்களை அதிகம் பிரதிபலிக்கும் வேறொரு
கற்பனை.
ஊர் பெரியவர் அவர்.
அவர் தெருவில் ஓடிக் கொண்டிருந்தார். அவருடைய வேலையாட்கள் ஆச்சரியத்துடன், ஆதங்கத்துடன் பார்த்தனர்.
"சின்னவரு பிரிஞ்சதுலருந்து பெரிய ஐயாவுக்கு மனசே சரியில்லை. பாவம்.
இன்னைக்கி மனவேதனை அதிகமாகி, சித்தபிரமை எதுவும் பிடிச்சிருச்சோ?"
இப்படி நினைத்தபடி வேலையாட்கள் அவரைத் தொடர்ந்தனர்.

பெரியவர் அந்தத் தெருக்கோடியில் நடந்து கொண்ட விதம்
அவர்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் இருந்தது.
அங்கு வந்துகொண்டிருந்த ஒரு பிச்சைக்காரனை பெரியவர் ஆரத்தழுவி, அணைத்து முத்தமிட்டார்.
"ஐயய்யோ.. என்ன இது. பெரியவருக்கு உண்மையிலேயே புத்தி பேதலிச்சு போச்சே."
பதட்டத்தோடு வேலையாட்கள் அனைவரும் பக்கத்தில் சென்றனர்.
அவர்கள் மனதில் பல எண்ணங்கள்.
"மூத்தவரும் இப்ப வீட்ல இல்ல. பக்கத்தூருக்குப் போயிருக்காரு.
இந்த நேரம் பாத்து, பெரிய ஐயாவுக்கு இப்படி ஆயிடிச்சே..."
வேலையாட்களுடன், ஊர் மக்களும் இப்போது கூடி விட்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்ல ஆரம்பித்தனர்.

சூழ நின்றவர்களின் முணுமுணுப்பெல்லாம் பெரியவரைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை.
அந்தப் பிச்சைக்காரனும் கண்களில் நீர் வழிய ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அதையும் அவர் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
அந்தப் பிச்சைக்காரனின் தலையை வருடியபடி,
பெரியவர் சூழ இருந்தவர்களைப் பார்த்தார்.
அவர் கண்களில் கண்ணீர்.
இத்தனை நாட்களும் அவரைக் கண்ணீரோடு கண்டு பழகிப் போனவர்களுக்கு, இந்தக் கண்ணீர் வித்தியாசமாகத் தெரிந்தது.

காரணம்? கண்ணீரோடு சேர்த்து அவரது முகம் மலர்ந்திருந்தது. இது ஆனந்தக் கண்ணீர்.
அந்த ஆனந்தக் கண்ணீரோடு, அவர் சொன்னார்:
"ம்! எல்லாரும் போய் ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்க. விருந்து பிரமாதமா இருக்கணும், தெரியுதா? வீட்டுல இருக்கிற கோழி, ஆடு, கன்னுக்குட்டி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுங்க. ம்! போங்கய்யா!"
என்று சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை வேலையாட்களையும் துரிதப் படுத்தினார்.
“அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்…” அந்தப் பிச்சைக்காரரின் வாய் இந்த வார்த்தைகளைச் சொல்ல முயன்றது.

பெரியவர் அந்த வார்த்தைகளைக் கேட்டது போலவே தெரியவில்லை. "என்னங்கய்யா சும்மா நிக்கிறீங்க? போய், ஒரு புது ட்ரஸ் கொண்டாங்க. மாடத்துல இருக்குற என் மோதிரத்தையும், ஒரு ஜோடி செருப்பும் கொண்டு வாங்க. ம்! சீக்கிரம்." என்று அவர் பணியாளர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
“அப்பா, கடவுளுக்கும் உமக்கும்...”
என்று பிச்சைக்காரன் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
பிச்சைக் காரனின் முணுமுணுப்பையெல்லாம் கொஞ்சமும் கேட்காமல், ஆதரவுடன் அவன் தலையை வருடியபடி,
தன் தோளில் அவனைச் சாய்த்துக்கொண்டு வீடு நோக்கி அழைத்து வந்தார்.
ஊரே அவருக்குப் பின்னால் தொடர்ந்தது.

வேலையாட்கள் கொண்டு வந்த மோதிரத்தை அந்தப் பிச்சைக்காரனின் கைகளில் பெரியவர் மாட்டிவிட்டார்.
செருப்பையும் போடச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.
செருப்பும் மோதிரமும் அணிந்ததும், களைப்பால் சோர்ந்து, அழுக்கேறியிருந்த அந்தப் பிச்சைக்காரனிடம்
கொஞ்சம் கம்பீரம் நுழைந்தது.
வேலையாட்களுக்குக் கொஞ்சம், கொஞ்சமாகப் புரிந்தது.

அந்தப் பிச்சைக்காரனின் அழுக்கேறிய கோலத்திற்குப்பின்,
பஞ்சத்தால் வாடிப்போயிருந்த,
தாடியும் மீசையும் மண்டிப் போயிருந்த அந்த முகத்தில்
அவர்கள் எதையோ தேடினார்கள்.
பெரியவர் இதைக் கவனித்தார். பெருமையோடு சொன்னார்:
"என்னங்கய்யா, பாக்குறீங்க? எம்பையன் தான்.
எத்தைனையோ நாளுக்கப்புறம் வந்திருக்கான்.
ம்! சீக்கிரம் போங்க. போய் விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்க..."
என்று சொன்னவர், தன் இளைய மகனிடம் திரும்பி,
"வாடா கண்ணா! அவங்க சமைக்கிறதுக்குள்ள நம்ம போய் குளிச்சிட்டு, ட்ரெஸ் மாத்திகிட்டு, ரெடியாகலாம்" என்று அணைத்தபடி அவனை அழைத்துச் சென்றார்.

தந்தையும் மகனும் படியேறி வீட்டுக்குள் சென்றனர். விருந்துக்கு ஏற்பாடுகள் ஆரம்பமாயின.
"காணாமற்போன மகன்" என்ற உவமையின் ஒரு பகுதியை இருவேறு வகைகளில் கற்பனை செய்தோம். நம்மில் பலர் கதைகளிலும், திரைப்படங்களிலும் அடிக்கடி பார்த்துள்ள, சில சமயங்களில் வாழ்வில் அனுபவித்துள்ள கண்டிப்பான தந்தையை முதல் கற்பனையில் சந்தித்தோம்.
தங்கு தடையின்றி அன்பு காட்டும் தந்தையை இரண்டாம் கற்பனையில் சந்தித்தோம். இப்படி ஒரு ஊதாரித் தந்தையை நிஜ வாழ்வில் சந்திப்பது கொஞ்சம் அபூர்வம்தானே. ஊதாரித் தந்தை என்று சொன்னேனா? ஆம், அன்பர்களே, அப்படித்தான் சொன்னேன்.
ஊதாரி மகன் உவமை என்று நாம் அடிக்கடி பேசிவரும் இந்த உவமையை, ஊதாரி தந்தை உவமை என்றும் கூறலாம். பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல், வருங்காலத்திற்குச் சேமித்து வைப்பதைப் பற்றி யோசிக்காமல் வீண் செலவு செய்யும் ஒருவரைத்தான் ஊதாரி என்று கூறுகிறோம்.
தனக்கு கிடைத்த சொத்தை, செல்வத்தை தாறுமாறாய், தலை கால் தெரியாமல் செலவு செய்த இளைய மகன் ஊதாரிதான். அதே போல், திரும்பி வந்த மகனை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், தலைகால் புரியாமல் அவன் மீது அன்பு காட்டும்... இல்லை... இல்லை... அன்பை அளவின்றி கொட்டும் தந்தையும் ஒரு ஊதாரி தந்தைதானே!

நம் கற்பனைகளில் வளர்ந்திருக்கும் விண்ணகத் தந்தை எப்படிபட்டவர்?








All the contents on this site are copyrighted ©.