2013-12-16 14:20:43

வாரம் ஓர் அலசல் – மகிழ்வாய் இருக்க....


டிச.16,2013. RealAudioMP3 கி.மு 560 முதல் 547வரை லிடியாவை ஆட்சிசெய்த குரோசெயுஸ்(Croseus) என்ற மன்னர், இவ்வுலகில் தான்மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைத்திருந்தார். ஏனெனில் அக்காலத்திய உலகில் பெரும் செல்வந்தருள் ஒருவராக அவர் திகழ்ந்தார். ஒருசமயம் சோலோன்(Solon) என்கிற கிரேக்க ஞானி லிடியாவுக்கு வந்தார். அவருக்குச் சிறந்த வரவேற்பளித்து தனது அரண்மனைச் செல்வங்களைக் காட்டி பெருமிதம் அடைந்தார் மன்னர் குரோசெயுஸ். பிறகு அவரிடம், ஏதென்ஸ் நாட்டு அறிஞரே, நீங்கள் பல நாடுகள் சென்று பல மனிதரைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் அறிவுத்திறனையும் நாங்கள் அறிந்துள்ளோம். இதுவரை தாங்கள் சந்தித்த மனிதர்களிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர் யார் எனக் கேட்டார் மன்னர். தனது பெயரைச் சொல்வார் என்ற பேராசையில்தான் இந்தக் கேள்வியையே கேட்டார் மன்னர். அதற்கு அந்த கிரேக்க ஞானி, டெல்லஸ்(Tellus) என்று சொன்னார். டெல்லஸ்க்கு அடுத்ததாக யார் எனக் கேட்டார் குரோசெயுஸ். வேறொருவர் பெயரைச் சொன்னார் சோலோன். அதற்கு மேலும் குரோசெயுசால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. ஞானியாரே, எனது மகிழ்ச்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள் என நேரடியாகவே கேட்டுவிட்டார். அதற்கு சோலோன், நீவீர் நிறைய செல்வங்கள் படைத்தவர், பல நாடுகளை வென்றவர், ஆயினும் உமது வாழ்நாள் முடிந்தபிறகுதான் உமது கேள்விக்கு நான் பதில்சொல்ல முடியும் என்றார். மன்னர் குரோசெயுசுக்கு ஞானிமீது ஆழ்ந்த வருத்தம். நாள்கள் நகர்ந்தன. பாரசீகத்தை ஆண்ட சைரஸ் மன்னரை வென்றுவிடலாம் என்ற நப்பாசையில் அந்நாட்டின்மீது படையெடுத்தார் குரோசெயுஸ். ஆனால் அதில் தோல்வியடைந்த குரோசெயுசைக் கட்டி, அவருக்கு நான்கு பக்கமும் விறகுக் கட்டைகளை அடுக்கி தீ மூட்டுமாறு கட்டளையிட்டார் சைரஸ். அப்போதுதான் கிரேக்க ஞானி சொன்னது குரோசியசுக்கு நினைவுக்கு வந்தது. அவர் சொன்ன வரிகளை முணுமுணுத்து நீண்ட பெருமூச்சு விட்டு சப்தமாக அழுதார் குரோசெயுஸ். இவர் முணுமுணுத்த வரிகளைக் கேட்ட சைரஸ், ஞானி சோலோன் சொன்ன வரிகள் தனக்கும் பொருந்தும் என்று உணர்ந்து, குரோசெயுசை விடுதலை செய்தார். அவரைத் தனது நண்பராகவும் ஆக்கிக் கொண்டார்.
எம் அன்பு நேயர்களே, வாழ்வு செழிப்பாக, வளமாக, பளபளப்பாக இருப்பதால்மட்டும் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது. அப்படியானால் வசதிபடைத்தவர் மத்தியில் தற்கொலைகளே இருக்காது. சீனா, உலகில் மூன்றாவது நாடாக, ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் 14, கடந்த சனிக்கிழமையன்று நிலவில் வெற்றிகரமாக இறக்கி ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. இந்தச் சாதனை, சீன அறிவியலாளருக்கு மகிழ்ச்சியை அளிப்பது உண்மைதான். ஆனால் இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக மனதுக்கு மகிழ்வைத் தர இயலுமா? வெற்றிகளிலும், பொற்குவியல்களிலும் மகிழ்ச்சி இருப்பதாகத்தான் உணர்ந்தார் மன்னர் குரோசெயுஸ் (Croseus). ஆனால் அந்த மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல என்பதை, மரணத்தின்பிடியில் இருந்தபோதுதான் அவர் உணர்ந்தார். அது செல்வத்தின் அகந்தையில் பிறந்த மகிழ்ச்சி என அவர் கண்டுகொண்டார். தென்னாப்ரிக்கக் காந்தியான நெல்சன் மண்டேலா, அவரது பூர்வீக மண்ணில் இஞ்ஞாயிறன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது வாழ்வு மகிழ்வாக அமைந்திருந்ததா? என ஓர் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பி அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்.
மண்டேலா, மகிழ்வான மனிதராக இறந்தார். 27 வருடங்கள் கடுமையான சிறைவாழ்க்கை அனுபவித்த இவர், பல ஏமாற்றங்களையும், கடினவாழ்வையும் எதிர்கொண்டார். ஆனால் அவர் தனது செயல்களில் நேர்மையானவராக, கனிவுள்ளவராகத் திகழ்ந்தார். அவரோடு இருந்தவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டார். எனவே, தான் மகிழ்வாக வாழ்ந்ததாக வாழ்வின் இறுதியில் உணர விரும்புகிறவர், மண்டேலா போல வாழ வேண்டுமெனச் சொல்லியுள்ளார் அந்த ஊடவியலாளர். புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் George Saunders இவ்வாண்டில் Syracuse பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையில், ”நான் எனது வாழ்க்கையில் கருணை காட்டத் தவறிய நேரங்களுக்காக மிகவும் வருந்துகிறேன்” என்று சொன்னார்.
2015க்கும் 2030ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குத் திட்டங்களை ஆராய்ந்துவருகின்றது ஐக்கிய நாடுகள் நிறுவனம். இதற்கு உதவும் நோக்கத்தில், உலகில் பல வல்லுனர்கள் இணைந்து, “உலக மகிழ்ச்சி அறிக்கை 2013” என்ற தலைப்பில் ஒரு நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்பதை, உளவியல் மற்றும் பொருளாதாரரீதியில் 156 நாடுகளில் இந்த வல்லுனர்கள் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். ஒருநாளில் ஏற்படுகிற நேர்மறை, எதிர்மறை உணர்வுகள், அந்நாள் முடிந்த விதம், ஒவ்வொரு நாளின் சமூக மற்றும் உளவியல் நிகழ்வுகள், வாழ்வு திருப்தியாக உள்ளதா?, ஒவ்வொரு நாளைய வாழ்வும் மகிழ்வாக இருக்கின்றதா? என்ற அடிப்படையில் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். வாழ்வு மகிழ்வற்று இருப்பதற்கு, மனம் சார்ந்த பிரச்சனைகளே பெரும்பாலும் காரணம் என இவ்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மக்களின் ஆயுள்காலம், சுதந்திரம், சமூகநல ஆதரவு என்ற அடிப்படையில் மக்கள் மகிழ்வாக வாழும் நாடுகள் வரிசையில் டென்மார்க், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
ஆனால், ஆயுள்காலம், சுதந்திரம், சமூகநல ஆதரவு ஆகியவற்றை வைத்து மட்டும் மக்கள் மகிழ்வாக வாழ்கின்றனர் என உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பிறரைப் புரிந்துகொண்டு பிறருக்கு ஆதரவளித்து, உதவும் ஒரு நல்வாழ்விலே உண்மையான மகிழ்வு இருக்கும் என்று பல பெரியோர் சொல்கின்றனர். ‘தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது’ என்று விவேகானந்தரும், ‘மகிழ்வு, ஏதோ தயாராக இருக்கும் ஒன்று அல்ல, அது உனது செயல்களிலிருந்து பிறப்பது’ என்று தலாய்லாமாவும் சொல்லியுள்ளனர். தாயுள்ளம் கொண்ட மாமியார்... மறுபிறவி கண்ட மருமகள்! என்று தலைப்பிட்டு கடந்த வாரத்தில் ஊடகங்களில் பேசப்பட்ட ஒரு செய்தியை, நேயர்களே நீங்களும் வாசித்திருக்கலாம். மும்பையைச் சேர்ந்த 58 வயதான சுரேகா, தனது மருமகள் வைஷாலிக்குத் தனது ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்திருக்கிறார். வைஷாலிக்குத் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். குடும்ப வாழ்க்கை மகிழ்வாகப் போய்க்கொண்டிருந்த சூழலில், 'வைஷாலியின் இரண்டு சிறுநீரகங்களுமே பழுது' என்று மருத்துவர்கள் சொன்னபோது, ஒட்டுமொத்தக் குடும்பமும் கவலையில் ஆழ்ந்தது. அப்போது, என் மருமகளுக்கு நானே சிறுநீரகத்தைக் கொடுக்கிறேன், ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்று மாமியார் சொல்லி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இப்போது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் முடிந்து மாமியாரும் மருமகளும் நலமாக உள்ளனர். முழுக் குடும்பமும் மகிழ்வாக உள்ளது. அன்பர்களே, உண்மையான மகிழ்ச்சி நாம் செய்யும் செயல்களிலிருந்து கிடைப்பதாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் தங்களது திருஅவையோடும், தங்களது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடும் மகிழ்வாக இருப்பதாக Washington Postன் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 92 விழுக்காட்டுக் கத்தோலிக்கர் திருத்தந்தை பிரான்சிஸ் குறித்தும், 95 விழுக்காட்டுக் கத்தோலிக்கர் திருஅவை குறித்தும் மகிழ்வோடு இருக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியதை மட்டும் கேட்டாலே, இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுக்குக் காரணம் புரியும். திருஅவை மகிழ்ச்சியின் இல்லம். கிறிஸ்தவச் செய்தி மக்களனைவருக்கும் மகிழ்வை அறிவிக்கும் நற்செய்தியாக உள்ளது. இந்த நற்செய்தியின் மகிழ்ச்சி வேறு எந்தவிதமான மகிழ்ச்சியும் அல்ல. நாம் ஒவ்வொருவரும் கடவுளால் வரவேற்கப்பட்டு அவரால் அன்புகூரப்படுகிறோம் என்பதை அறிவதிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியாகும். நாம் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும், நமது பலவீனங்களுக்கு மத்தியில் கடவுளின் உதவியுடன் நாம் நமது கண்ணீரையும் கவலையையும் மேற்கொண்டு புதுவாழ்வு வாழ முடியும். கிறிஸ்தவ மகிழ்ச்சி, நம்பிக்கையைப் போன்று, கடவுளின் பிரமாணிக்கத்தில் வேரூன்றப்பட்டதாகும். கடவுள் தம் வாக்குறுதிகளில் மாறாதவர் என்ற உறுதியில் கிடைப்பதாகும். RealAudioMP3
ஆனால் சிலர் மகிழ்வை மதுவிலும், போதைப்பொருளிலும், சிகரெட்டிலும், பணத்திலும் வைக்கின்றனர். ஒரு முனிவர் சொன்ன, எலும்புக்கு அலைந்த நாய் கதை நமக்குத் தெரிந்திருக்கும். ஒரு செல்வந்தர் வீட்டில் வளர்ந்து வந்த நாய் ஒன்று வேளாவேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தியடையாமல், வீட்டைவிட்டு வெளியேறி தெருவுக்கு வந்து தனக்குப் பிடித்தமான உணவைத் தேடத் தொடங்கியது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். தெருவில் திரிந்துகொண்டிருந்த மற்ற நாய்களோடு சண்டைபோட்டுத் தெருவோர எச்சில் இலையைக்கூட அந்த நாயால் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அந்த நாய்க்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத்துண்டு ஒன்று கிடைத்தது. அது, வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால் அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல்போல் இருந்தது. ஆனாலும் அதைப் புரிந்துகொள்ளாத அந்த நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. தன் இரத்தத்தை சுவைத்த அந்த நாய் அது அந்த எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக அதைக் கடிக்க ஆரம்பித்தது. வழிபோக்கர் ஒருவர் அந்த நாய்க்கு அதை உணர்த்தியும் அது அவரின் எச்சரிப்பை ஏற்க மறுத்துத் தனது செயலைத் தொடர்ந்தது.
இப்படித்தான் சிலர், தன்னையே அழித்துக்கொண்டும், ஏமாற்றிக்கொண்டும் கிடைக்கும் தற்காலிக மகிழ்வைத் தேடி அலைகின்றனர். நாம் கடந்துவரும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வு வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும். காலம் நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் காலத்தைப் பயனுள்ளதாய் அமைக்கவேண்டும் என ஆன்றோர் சொல்கின்றனர். 2013ம் ஆண்டின் நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாம், ஆன்றோரின் இக்கூற்றுக்கேற்ப, நம் வாழ்வை பயனுள்ளதாய் அமைத்துக்கொள்வோம். வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்வோம்.
புத்தர் சொன்னதுபோல, நம்முடைய உழைப்பும் சொற்களும் நமக்கும் பிறர்க்கும் பயனுள்ளவையாக இருக்கும்போது மகிழ்ச்சி வருகிறது. உண்மையான மனமகிழ்ச்சி, நம் வாழ்வின் நற்செயல்களிலிருந்தும், நற்பண்புகளிலிருந்தும் கிடைக்கிறது. நான் எந்நிலையில் இருந்தாலும், கடவுள் என்னை ஏற்று அன்பு செய்கிறார் என்ற ஆழ்ந்த உணர்விலிருந்து கிடைக்கிறது.







All the contents on this site are copyrighted ©.